மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டுமே தவிர‘குடி’மகன்களின் தாகத்தை அல்ல?

சனி மே 16, 2020

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனது. இதனால், மாவட்டத்தில் நிலத்தடிநீர் முற்றிலும் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. நெல், கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை கூட காப்பாற்ற முடியாமல் காய்ந்து வருகின்றன.

இதனால், விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது எப்படி என தெரியாமல் சோக நிலையில் உள்ளனர். நிலத்தடிநீர் குறைவால், பூண்டி, திருவாலங்காடு, கடம்பத்தூர், திருத்தணி,பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உட்பட பல ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீருக்காக குடங்களைத் தூக்கி கொண்டு, தெரு தெருவாக பெண்கள் அலைகின்றனர்.

ஒரு குடம் தண்ணீர் பிடிப்பதற்குள் கடும் அவதியை சந்திக்கின்றனர். கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் மட்டுமே ஊராட்சி தலைவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் கூறினால், ஒன்றிய, மாவட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம் என கூறி,சமாதானம் செய்கின்றனர். அதோடு, குடிநீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து மகளிர் அமைப்பினர் மற்றும் இல்லத்தரசிகள் கூறுகையில்,‘சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பது எப்படி,கிராமங்களில் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க என்ன நடவடிக்கை என்பது குறித்து அரசு யோசிக்கவில்லை.

அடுத்த மாதம் என்ன நடக்குமோ, எப்படி கடக்குமோ என்ற அச்ச உணர்வு, கிராம மக்களை ஆட்டிப்படைக்கிறது.

ஆங்காங்கே குடிநீர் கிடைக்காமல் குடங்களுடன் அலையும் நிலையில்,அதைப்பற்றி கவலைப்படாமல் மதுக்கடைகளுக்கு மட்டும் மது வகைகளை முழு அளவில் சப்ளை செய்வது, கொரோனா பரவல் குறித்து கவலைப்படாமல், அரசு மதுபான கடைகளை திறப்பது என அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

ஒரு நல்ல அரசாங்கம் என்பது, மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டுமே தவிர‘குடி’மகன்களின் தாகத்தை அல்ல.

இனியாவது திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் உட்பட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற அதிமுக அரசு செயல்பட வேண்டும்’ என்றனர்.