மலேசியாவில் 1,368 வெளிநாட்டினர் கைது!

வெள்ளி மே 15, 2020

கொரோனா பதற்றம் நிலவி  வரும் இச்சூழலில், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள சந்தையில் தேடுதல் வேட்டையினை நடத்திய அந்நாட்டு குடிவரவுத்துறை சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 1,368 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது. காலாவதியான விசா, முறையான விசா இல்லாமல் பணியாற்றியமை, போலியான ஆவணங்களை வைத்திருந்தமை ஆகிய குடிவரவுக் குற்றங்களுக்காக இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுகின்றனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களில் 790 பேர் மியான்மரிகள், 421 பேர் இந்தோனேசியர்கள், 78 பேர் வங்கதேசிகள், 54 பேர் இந்தியர்கள் மற்றும் 6 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் சில நாட்டினர் உள்ளதாக குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 1,368  பேரில் 1,009 பேர் ஆண்கள், 261 பேர் பெண்கள் மற்றும் 98 பேர் குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது.

“மொத்தம் 7,551 வெளிநாட்டினர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 1,368 பேர் கைது செய்யப்பட்டனர்,” என டஸ்மி தவுத் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், கைதாகிய வெளிநாட்டினர் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.