மருத்துவ குணம் கொண்ட பாகற்காய்!!

புதன் மே 29, 2019

மருத்துவ குணம் கொண்ட பாகற்காயை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதை அநேகர் தவிர்த்து விடுகின்றனர். ஏனெனில், அதில் காணப்படும் கசப்புத் தன்மையே ஆகும்.

இதனால் என்னவோ ஆங்கிலத்தில் Bitter gourd என்று பாகற்காய் அழைப்படுகின்றது. Bitter  என்றால் கசப்பு என்று தமிழில் பொருள்படும்.

பாகற்காயா? அது கசப்புத் தன்மை கொண்டது. அதனால் அதை உணவிலிருந்து தவிர்த்து விடுவதாக பலர் கூறுகின்றனர்.
இவ்வாறு கசப்புத் தன்மை கொண்ட பாகற்காய் நோய் தீர்க்கும் நிவாரணியாக, அதி மருந்தாக விளங்குகின்றமையை அறியாதோர் அநேகர்.

மூலிகைச் செடி இனத்தைச் சேர்ந்த பாகற்காய் மாத்திரமின்றி, அதன் விதைகளும் கூட மருத்துவத் தன்மை கொண்டதாக விளங்குகின்றது என்பது அண்மைய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாகற்காயில் விற்றமின் பி 3, விற்றமின் பி 5,  விற்றமின் பி 6 போன்ற விற்றமின்களும் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம்  போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன.  

இவை எமது உடலுக்கு மிகுந்த பயனளிக்கிறது. அத்தோடு, பாகற்காயில் விற்றமின் சி மிகுதியாக இருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் உள்ளது.

ஆட்கொல்லி நோயான புற்றுநோய்க்கு கூட, பாகற்காயின் விதைகளானவை அதிமருந்தாகக் காணப்படுவதாக, பேராதனை பல்கலைக்கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பாகற்காய் விதைகளானவை, புற்றுநோய் கலன்களை இல்லாதொழிக்கும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுவதோடு, பாகற்காயின் 8 விதைகளில் புற்றுநோய்க்கான ஒரு மருந்துக் குளிசை தயாரிக்க முடியும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாகற்காய் விதைகள், மனிதனின் உள் உறுப்புகளான சிறுநீரகம், ஈரல் போன்றவற்றுக்கும் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் மாத்திரமின்றி ஏனைய நோய்களான நீரிழிவு,இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்துதல். சுவாசக் கோளாறு,கல்லீரல் பிரச்சினைகள்,மலச்சிக்கல், இதயநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் அதி மருந்தாக பாகற்காய் விளங்குகின்றது.