முள்ளிவாய்க்கால் கஞ்சி!

திங்கள் மே 20, 2019

”முள்ளிவாய்க்கால் கஞ்சி” என்பது ஒரு குறியீட்டு உணவு. அதன் வழி, எங்கள் மீது நிகழ்ந்தப்பட்ட கொடூர இனவழிப்பு நிகழ்வை, நாங்கள் இனிவரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்லலாம் என்று நம்புகின்றோம். அது ஒரு வியாபார,விளம்பரப் பண்டமாக இருக்க முடியாது. அவ்வாறு அர்த்தமும்,நோக்கமும் மாறும் வகையில் அந்த உணவு அடையாளத்தை நாம் கேலிக்கூத்தாக்கக் கூடாது. அதன் பெறுமதியும்,அர்த்தமும், புனிதமும் கெடாதவாறு தொடரப்பட வேண்டும்.

இது ”மே 18”என்கிற எங்கள் வலி நாளுக்கு மாத்திரமான, விசேட உணவாக இருக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறை செய்யப்படுகிற அருமருந்தாக அது இருத்தல் வேண்டும். எல்லோரும் கூடுகிற இடங்கள் என்றில்லாமல், எங்கும்,எவரும், அந் நாளில் அதைச் செய்து உண்ண வேண்டும். அந்த நாளின் அடையாளமாக அது அன்றைய நாளின் வீட்டுணவாகவும் இருக்க வேண்டும்.

”பாற்கஞ்சி” என்பது முள்ளிவாய்க்கால் கஞ்சி கிடையாது. எமது புழக்கத்தில் உள்ள பாற்கஞ்சிக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அது தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான அதன் உள்ளீடுகளைக் கொண்ட செய்முறைக் குறிப்பொன்றைத் தயாரித்து ஆவணமாக்கலாம். அதோடு கூடிய முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பாடலொன்றை உருவாக்கி, அந்தப் பாடல் இசைக்கப்பட்ட பிறகு, இந்தக் கஞ்சியை அன்றைய வரலாற்று வலிநாளின் ஞாபகமாக நாம் அருந்தலாம். அனைவரும் கூடி, கஞ்சி தொடர்பான ஒரு பொது ஆவணக் கையேட்டை உருவாக்குதல் வேண்டும். பின்னர் அது உரியமுறைப்படி பின்பற்றப்பட வேண்டும்.

மிகக்குறைந்தளவிலான அரிசி, நெல், தண்ணீர் என்கிற இந்த மூன்று பொருட்களாலானதே முள்ளிவாய்க்கால் கஞ்சியாக இருக்க முடியும். உப்பு, பால் என்பவை அறவே அற்றவையானதாகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி இருக்க முடியும். இருக்க வேண்டும். அப்படித் தான் அது அன்றைய நாளில் இருந்தது. சுவையற்ற நீருணவு அது. ஒரு லீற்றர் தண்ணீரில் அதிகமாக நூறு கிராம் அரிசியைக் கொண்டதாக அது இருந்திருக்கலாம். அப்படித் தான் அது தயாரிக்கப்படவும் வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நாளின் பெறுமதியும், அதன் நோக்கமும் புரியும் வகையில் அதை நாம் தயாரித்துப் பரிமாற வேண்டும். அதன் பெறுமதியை உணர்த்துவதாக அதற்கு முன்னர் இசைக்கப்படுகிற பாடல்வரிகள் இருக்க வேண்டும். 


இது தான் ”முள்ளிவாய்க்கால் கஞ்சி” என்கிற வரலாற்று அடையாளத்தை இந்த உலகத்தில் காலங்காலமாக நாம் எடுத்துச் செல்ல உரிய வழியாக இருக்கும்.

”புரிவோம். செயற்படுத்துவோம். பின்பற்றுவோம்.”

- தீபிகா-
19.05.2019