நாம் ஏன் முகத்தை அடிக்கடி தொடுகிறோம்?

வியாழன் ஏப்ரல் 09, 2020

மனிதர்கள் அவ்வப்போது முகத்தைத் தொடுவது ஒரு பொதுப் பழக்கம். முகத்தைத் தொடுதல் என்பது தாடியைத் தடவிக்கொடுப்பது, நெற்றியில் கைவைப்பது, வியப்பிலோ அதிர்ச்சியிலோ வாயில் கைவைப்பது, மூக்கை நோண்டுதல், விரல் நகத்தைக் கடித்தல், கண்ணைக் கசக்குதல் என்று பல்வேறு செயல்களை உள்ளடக்கியது. தற்போது கரோனா கொள்ளைநோயின் பரவலையொட்டி முகத்தில் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார்கள். கரோனா தொற்று உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவரைச் சுற்றியுள்ள பரப்பில் போய் அந்தக் கிருமி படியும். அதில் கை வைக்கும் இன்னொருவர் தன்னிச்சையாகத் தனது வாய், மூக்கு, கண்ணுக்குக் கையைக் கொண்டுபோவதால் கரோனா வைரஸ் அவருக்கும் தொற்றிக்கொள்ளும். இதனால்தான், முகத்தைத் தொடக் கூடாது என்பது கரோனா தடுப்பு வழிமுறைகளுள் முக்கியமான ஒன்றாகக் கூறப்படுகிறது.

ஒருவர் தன் முகத்தை ஏன் தொட வேண்டும் என்ற அடிப்படையான கேள்விக்கு உளவியலாளர் நடாஷா திவாரி சொல்கிறார்: “நாம் இயல்பிலேயே அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறோம். அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதுகூட சிசுக்கள் தங்கள் முகத்தை அடிக்கடி தொடுகின்றன. முகத்தைத் தொடுவதால் நமக்கு சற்றே ஆசுவாசம் கிடைக்கிறது. சில நரம்புகளுக்கு அழுத்தம் கிடைப்பதால் அழுத்தப் புள்ளிகளை (pressure points) முடுக்கிவிடுகிறோம். அதனால், பாராசிம்பதெட்டிக் நரம்பியல் மண்டலம் ஊக்குவிக்கப்படுகிறது. அதனால்தான், நமக்கு ஆசுவாசம் கிடைக்கிறது. நாய்கள், பூனைகளும் இவ்வாறே செய்கின்றன. அதிர்ச்சி ஏற்படும்போதும், வியப்பு ஏற்படும்போதும், வருத்தமாக இருக்கும்போதும் பெற்றோர் தங்கள் முகத்தில் கை வைப்பதைக் குழந்தைகள் பார்க்கிறார்கள். அதை அவர்களும் அப்படியே பின்பற்றுகிறார்கள்.”

ஒரு மணி நேரத்தில் ஒருவர் சராசரியாக 23 தடவை தங்கள் முகத்தைத் தொடுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. சமீபத்தில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் முகத்தைக் கையால் தொடாமல் இருப்பதன் முக்கியத்துவம் பற்றிப் பேசும்போது அவரை அறியாமல் முகத்தைக் கையால் தொட்டுவிட்டார். இந்த அளவுக்கு அது தன்னிச்சையானது. என்றாலும், நமக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நம் முகத்தைத் தொடும் பழக்கத்தை நிறுத்திதான் ஆக வேண்டும்.

ஆசை