நாங்கள் மிக்க நல்லவர்கள்!

சனி மே 25, 2019

உண்மையில் 
எங்களிடம் ஒரு துளி நீதியும் கிடையாது.
வெளிச்சங்களில் ஒரு முகத்தோடும்
இருளில் இன்னொரு முகத்தோடும்
அலைய விரும்புகிற மனம் தான் 
நம்முடையது.

நமக்கு அவசியமான எல்லாவற்றையும் 
நியாயப்படுத்துகிற கலைகளை 
நாங்கள் தேடிச் சேகரித்து வைத்திருக்கின்றோம்.
கள்ளப் புன்னகைகளும்...
கள்ளக் கைகலுக்கல்களும்...
எங்களுக்கு இப்போது நன்கு கைவந்து விட்டது.
கள்ள அழுகைகளைில் கூட
நாங்கள் இப்போது கைதேர்ந்து விட்டோம்.

எங்கள் மன ஆழங்களில் தேங்கியிருக்கும்
கறுப்பு அழுக்குகளை
நாங்களொரு போதும் வெளித் தெரிய விடுவதில்லை.
எங்களைப் போல
மிகுந்த பம்மாத்துக் காரர்கள் தான்
எங்கும் சிரித்துக் கொண்டு எதிர்ப்படுகிறார்கள்.
பிழைத்துக் கொள்வதற்குரிய பெருந்தகுதியே
இது தானென்று நாங்கள் இப்போது நம்புகின்றோம்.

ஒரு அப்பாவியாய் இருத்தலில்
ஏற்படும் காயங்களின் ரணங்களிலிருந்து
நாங்கள் இந்த நரிமுகங்களைப் பெற்றுக் கொண்டோம்.
ஒரு சத்தியவானாக வாழ்தலில்
கிடைக்கப் பெற்ற ஏமாற்றங்களிலிருந்து
நாங்கள் நிரம்பப் படித்து விட்டோம்.

தொடக்கத்தில் எங்கள் உறக்கத்தை தின்ற
குற்ற உணர்வுகளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு
நாங்களும் இப்போது முகமூடிகளை அணிந்து விட்டோம்.
எதிலும் தங்களுக்கான இலாபத்தையே
தேடிக் கொண்டிருக்கும் 
நம் பெருமை விரும்பிச் சந்தோசங்கள்
தங்களைச் சுற்றிய ஒளிவட்டத்துக்கே 
ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

‘‘ நாங்கள் மிக்க நல்லவர்கள் ‘‘
என்று சொல்லிக் கொண்டே சாவது தான்
எங்கள் இறுதி ஆசையாயிருக்கிறது.

-தீபிகா