நண்பர்கள்,குடும்பத்தினர்,உறவினர் கதறி அழ அடக்கம்!!

சனி ஜூன் 22, 2019

சணா எனது நண்பன். இன்று தனது 20 வயது மகள் அபி, பெட்டியில் அடைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுவதை பார்த்து கதறி அழுதபடியிருக்கிறான்.

ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்து, அங்கிருந்து பிரான்சுக்கு வந்த சணா குடும்பத்து மூத்த மகள் அபிக்கு மருத்துவராவது கனவு. அதன்படியே மருத்துவப்படிப்பையும் தெரிவு செய்தாள்.

s

பிரான்சில் படிப்பை முடிக்க ஆண்டுகள் அதிகம் என்பதால், செர்பியாவில் மருத்துவராக கல்வியை தொடர்ந்தவள், ஓராண்டை நிறைவு செய்திருந்த போதில் தான் அந்தத் துயரம் நிகழ்ந்தது.

மாலை தங்கியிருந்த அறையை சுத்தம் செய்து, அந்த குப்பையை உரிய இடத்தில் போடுவதற்காக வீதியை கடந்தபோது, மது போதையில் வந்ததாக கூறப்படும் ஓர் செர்பியன் வாகனத்தால் மோதியுள்ளான். தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கோமா நிலைக்கு சென்ற அபி, சில நாட்களில் இறந்து போனாள்.

s

குறித்த செர்பிய மனிதர் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு தன்னால் முடிந்த மருத்துவ முயற்சிகளை மேற்கொண்டும் அபியை காப்பாற்ற முடியவில்லை. இப்போது விசாரணையில் இருந்தபடி அபியின் அடக்கத்துக்கான அனைத்துச் செலவுகளையும் தானே பொறுப்பெடுத்து, இன்று பிரான்சில் அபியின் பாடசாலை நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர் எனப் பலரும் கதறிஅழ அடக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் சார்ந்த சமய முறைப்படி சடங்குகள் நடைபெறுகின்றன; ஒரு பாஸ்ரர் ஆறுதல் உரை நிகழ்த்துகிறார்...

"ஆண்டவராகிய யேசுகிறீஸ்து, அபியின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார், ஆதலால் தான் அவரை இந்த வயதிலேயே தன்னிடத்தில் அழைத்து தனது வலப்பக்கத்தில் அமரச் செய்துள்ளார்".

"ஒரு சிறுமியின் கனவை நிராசையாக்கி, இத்தனைபேரை கதறிஅழ வைத்து தான், யேசு தன் அன்பைக் காட்ட வேண்டுமா?"