ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 32

புதன் மே 01, 2019

கே.பியின் முகத்தில் அறைந்த பொறுப்பாளர்கள்
- கலாநிதி சேரமான்

 

17.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த புலனாய்வுத்துறைப் போராளி தவேந்திரனின் சரணடைவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்நாட்டு – வெளிநாட்டு வலையமைப்புக்களை சிதறடிக்கும் நோக்கத்துடன் கோத்தபாய ராஜபக்சவால் தொடங்கப்பட்ட ஒப்ரேசன் டபிள் எட்ஜ் என்ற புலனாய்வு நடவடிக்கை பற்றிய தொடர் கட்டுரையாகக் கடந்த பதின்மூன்று மாதங்களுக்கு முன்னர் இப்பத்தி கட்டவிழ்ந்த பொழுதும், இந் நடவடிக்கையோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபட்டிருந்தோரின் பின்னணி மற்றும் அவர்களின் முன்னைய – பின்னைய நடவடிக்கைகளையும் அவற்றில் வெளிக்கொணர்ந்திருந்தோம்.

 

இது வாசகர்களின் கவனத்தை வெவ்வேறு காலகட்டங்களுக்கும், வெவ்வேறு சம்பவங்களுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் எடுத்துச் சென்றிருந்தாலும், இவையெல்லாம் ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையின் தார்ப்பரியத்தை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு நிச்சயம் உதவியிருக்கும். ஒவ்வொரு தொடர்களிலும் வெவ்வேறு காட்சிகள் அல்லது ஒன்றோடொன்று நேரடியாகத் தொடர்புபடாதவை போன்று தென்படக் கூடிய சம்பவங்கள் கட்டவிழ்ந்தாலும் இவையெல்லாம் இறுதியில் ஒரே கோட்டில் சந்தித்ததையும் வாசகர்கள் புரிந்திருப்பார்கள்.

 

எனவே எமது கடந்த முப்பத்தொரு தொடர்களின் தொகுப்பாகவும், ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையின் விளைவாக தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஏற்பட்ட பாதிப்புக்களின் பதிவாகவும், அவற்றை எவ்வாறு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கையாண்டார்கள் என்பது பற்றிய குறிப்புகளாகவும் இனிவரப் போகும் தொடர்கள் கட்டவிழ உள்ளன.

 

* * *

 

18.05.2009 அன்று அதிகாலை முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை உறுதியாகியதும் கே.பி செய்த முதல் வேலை வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தானே இயக்கத்தின் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினர் என்ற அறிவித்தலை வெளியிட்டது தான்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு கே.பி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடிய பலருக்கு கே.பி எப்படியிருப்பார் என்பது தெரியாது. அவரது குரலைக் கூட அவர்களில் பலர் கேட்டதில்லை.

 

1997ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரான்சில் இருந்து வன்னிக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் லோறன்ஸ் கிறிஸ்ரி திலகர் அழைக்கப்பட்டது முதல் 2003ஆம் ஆண்டு சித்திரை மாத இறுதியில் தமிழீழ தேசியத் தலைவரால் ஓய்வுநிலைக்குப் பணிக்கப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்கள் அனைத்தையும் மேற்பார்வை செய்பவராக கே.பி விளங்கினாலும், தனது இரு கரங்களான மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரன் (பிரான்ஸ்), சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேந்திரா (நோர்வே) ஆகியோர் ஊடாகவே கிளைகளை கே.பி நிர்வகித்து வந்ததே இதற்குக் காரணமாகும். ஏன், கே.பியுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல் வலையமைப்பு, வெளிநாட்டு வணிக வலையமைப்பு, ஆயுதக் கொள்வனவு வலையமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த பலருக்குக் கூட கே.பி எப்படி இருப்பார் என்று தெரியாது.

 

இதுதான் 18.05.2009 இற்குப் பின்னர் கே.பியிற்குப் பாதகமாகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமாகவும் அமைந்தது எனலாம்.

 

காரணம் 2003ஆம் ஆண்டு ஓய்வுநிலைக்குத் தமிழீழ தேசியத் தலைவரால் கே.பி பணிக்கப்பட்ட பொழுது அவருக்கு என்ன நடந்தது என்பது வெளிநாடுகளில் பணிபுரிந்த செயற்பாட்டாளர்கள் பலருக்குத் தெரியாது. பொதுமக்களுக்கும் தெரியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத வலையமைப்புக்களையும், கப்பல் வலையமைப்புக்களையும் கே.பி தொடர்ந்தும் நிர்வகித்து வருகின்றார் என்று தான் பலர் நினைத்தார்கள்.

 

அதேநேரத்தில் கே.பியின் இரு கரங்களான மனோ, சர்வே ஆகியோர் தமது பொறுப்புக்களில் இருந்து மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார்கள் என்பது பலருக்குத் தெரியும்.

 

Mano

(மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரன்)

 

இதில் மனோ அவர்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், தலைமைக்குக் கட்டுப்படாத அவரது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும், நிர்வாக முறைகேடுகளும் தான். அதேபோல் சர்வே இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் முறையான கணக்குகள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைக் கையாண்டமையும், பல இலட்சம் டொலர்களை விரயம் செய்தமையுமாகும்.

 

Sarve

(சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேந்திரா)

 

இது தான் 18.05.2009 இற்குப் பின்னர் கே.பியிற்கு சிக்கல் ஏற்படக் காரணமாகியது. ஏனென்றால் தன்னை அறிந்திராத பலருடன் கே.பி தொடர்பு கொண்டு தான் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சியுள்ள மூத்த உறுப்பினர் என்று சுயபிரகடனம் செய்த பொழுது, தாம் கே.பியுடன் தான் உரையாடுகின்றோமா என்பதை நம்புவதற்குப் பலர் தயாராக இருக்கவில்லை. தான் தான் வன்னிப் போரின் இறுதி மாதங்களில் தமிழீழ தேசியத் தலைவரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வராஜா பத்மநாதன் என்று கே.பி கூறிய பொழுதும் கூட அதை அவர்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை.

 

அத்தோடு கே.பி தொடர்பு கொண்டவர்களில் ஒரு தொகுதியினர் யுத்தம் முடிவடையும் வரை வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் - பொறுப்பாளர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணியவர்கள் என்பதால், கே.பியை இயக்கத்தின் எஞ்சியிருந்த ஒரேயொரு மூத்த உறுப்பினராகக் கருதுவதற்கும் அவர்களில் பலர் தயாராக இருக்கவில்லை.

 

அதை விட முள்ளிவாய்க்காலை சிங்களப் படைகள் கைப்பற்றுவதற்கு முன்னரான நாட்களில் வெளிநாட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் - பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு ‘தமிழீழ தேசியத் தலைவர் பத்திரமாக இருக்கின்றாரா?’ என்று வினவியோருக்கு கூறப்பட்ட பதில் ‘அண்ணையைப் பற்றி யோசிக்க வேண்டாம்’ என்பதாகும்.

 

இவ்வாறான சூழமைவில் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்தும், தாமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவர் என்ற தோரணையிலும் தம்முடன் கே.பி உரையாடியமை பலருக்கு சினத்தை ஏற்படுத்தியது. அப்படியான சிலர் கே.பியின் முகத்தில் அறைந்தால் போல் அவரிடம் கூறினார்கள்: ‘நீங்கள் யார் என்பதே எங்களுக்குத் தெரியாது. முதலில் எங்களுக்குத் தெரிந்தவர்கள் ஊடாக நீங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தி விட்டு எங்களுடன் கதையுங்கள்.’

 

இவ்வாறான பின்புலத்தில் தான் இயக்கத்தால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இயக்கத்தை விட்டு நீக்கப்பட்ட மனோ, சர்வே போன்றவர்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டு, இவர்களுடன் உரையாடியது கே.பி தான் என்பதை உறுதிப்படுத்தியதோடு, கே.பியை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கின்றார்கள். இதனால் சீற்றமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள் பலர், ‘நீங்களே இயக்கத்தை விட்டு விலக்கப்பட்டவர்கள். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் சொல்வதை நாம் ஏன் ஏற்க வேண்டும்?’ என்று அவர்களிடம் காட்டமாகக் கேள்வியெழுப்பினார்கள்.

 

இவர்களுக்கு மேலதிகமாக கே.பியிற்கு இடையூறாக விளங்கியவர்கள் அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களின் கீழ் வெளிநாடுகளில் பணிபுரிந்த போராளிகள். இவர்களுக்கு 2003ஆம் கே.பி இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடக்கம் எவ்வாறான குழறுபடிகளில் அவர் ஈடுபட்டார் என்பது வரை நன்கு தெரியும்.

 

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சிங்களப் படைகள் முழுமையாகக் கைப்பற்றினால் கே.பியின் கீழ் பணிபுரியுமாறோ, அல்லது தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் மூத்த தளபதிகள் - பொறுப்பாளர்களின் தொடர்புகள் இழக்கப்பட்டால் கே.பியை அடுத்த தலைவராகவோ அன்றி பொறுப்பாளராகவோ ஏற்றுக் கொள்ளுமாறோ இவர்கள் எவருக்கும் எச்சந்தர்ப்பதிலும் வன்னியில் இருந்து அறிவுறுத்தல்கள் எவையும் விடுக்கப்படவில்லை. இதனால் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்தும், தானே தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவர் என்று சுயபிரகடனம் செய்தும் கே.பி கூறிய அம்புலிமாமா கதைகளை நம்புவதற்கு இவர்களில் பெரும்பாலானோர் தயாராக இருக்கவில்லை.

 

Murasu

(முரசு என்றழைக்கப்படும் ரகு அல்லது பாண்டியன்/நாதன்)

 

இதற்கு உதாரணமாக கே.பியின் தலைமைத்துவப் பிரகடனத்தை முரசு என்ற அனைத்துலகத் தொடர்பகப் போராளி கையாண்ட விதத்தை இத் தொடரில் பதிவு செய்கின்றோம். குறித்த போராளி நாதன், பாண்டியன், ரகு போன்ற பெயர்களில் அறியப்பட்டவர். 2005ஆம் ஆண்டு அனைத்துலகத் தொடர்பகத்தின் பரப்புரைப் பிரிவுப் பொறுப்பாளராகவும், பின்னர் 2006ஆம் ஆண்டு தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் பொறுப்பாளராகவும், அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் இருந்து ஐ.பி.சி வானொலியின் பொறுப்பாளராகவும் விளங்கியவர் இவர்.

 

(மடையுடைப்புத் தொடரும்)

 

பி.கு: இப்பொழுது இயங்கும் ஐ.பி.சி என்ற ஊடகம் ஒரு தனியார் நிறுவனமாகும். ஆனால் 2009 ஆவணி வரை இயங்கிய ஐ.பி.சி தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுகங்களால் நிர்வகிக்கப்பட்ட ஓர் ஊடகமாகும்.

 

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

அறிமுகம்

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4

பாகம் - 5

பாகம் - 6

பாகம் - 7

பாகம் - 8

பாகம் - 9

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30

பாகம் - 31