பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சி வேதனையளிக்கிறது!

திங்கள் செப்டம்பர் 09, 2019

பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சி வேதனையளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை வந்தார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜ.க. அரசின் 100 நாள் ஆட்சி வேதனை அளிக்கிறது.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் சட்டம், ,தகவல் உரிமை சட்டத் திருத்தம் கண்டிக்கத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து அற்புதம்மாளை அழைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் சென்று முறையிட்டோம். இது தொடர்பாக கவர்னரிடம் மனு அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக வளர்ச்சிக்காக சென்றுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணம் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர் நாடு திரும்பி அறிக்கை வெளியிட்ட பின்னரே மேலும் கருத்து கூற முடியும்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் சாதிமத குறித்த பாடத்திட்டத்தை நீக்க வேண்டும். அதில் அம்பேத்கரை தலித் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தை கண்டித்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாளை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 12-ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.