பெண்களுக்கு இலவச பயணம்!

வெள்ளி செப்டம்பர் 06, 2019

டெல்லி மெட்ரோ புகையிரதத்தில்  பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டால் அந்நிறுவனம் எப்படி லாபத்தில் இயங்கும்? என உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் 343 கிலோமீட்டர் தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 28 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், 46,845 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 104 கிலோமீட்டர் தூரத்திலான நான்காவது வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு திட்டமிடப்படுள்ளது. 6 முனையங்களுடன் அமைக்கப்படும் இந்த வழித்தடத்துக்கான நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு அதற்கான தொகை உரிமையாளர்களுக்கு இன்னும் அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

இதற்கிடையில், டெல்லியில் வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்றுமாசு தொடர்பான வழக்கை இன்று மீண்டும் விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு, ‘நான்காவது மெட்ரோ ரெயில் வழத்தடம் தொடர்பான பணிகளை விரைவுப்படுத்தி செய்து முடிக்க மத்திய அரசும் டெல்லி அரசும் முன்வந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

மெட்ரோ ரெயிலின் உள்புறம்


இந்த பணிக்காக நில ஆர்ஜிதம் செய்த வகையில் 50:50 என்ற விகிதாச்சாரத்தில் 2,447.19 கோடி ரூபாயை டெல்லி அரசு உடனடியாக உரியவர்களுக்கு வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிதி நெருக்கடியில் டெல்லி மெட்ரோ புகையிர  சேவை தள்ளாட்டம் போடுவதாக சமீபத்தில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தால் டெல்லி மெட்ரோ ரெயில் எப்படி லாபத்தில் இயங்கும்? ’ என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன் இந்த இழப்பை டெல்லி அரசுதான் ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.