பிச்சை எடுத்து வங்கி கணக்கில் ரூ.6¼ கோடி சேர்த்த லெபனான் பெண்!

ஞாயிறு அக்டோபர் 06, 2019

லெபனான் நாட்டில் பெண்மணி ஒருவர் மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து தனது வங்கி கணக்கில் சுமார் ரூ.6 கோடியே 37 லட்சம் சேர்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

லெபனான் நாட்டில் சீதோன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாசலில் தினமும் பிச்சை எடுத்து வரும் பெண், ஹஜ் வாபா முகமது அவத். இவரை மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்கு தெரியும். இவர் தான் பிச்சை எடுக்கும் பணத்தை ஜே.டி.பி. வங்கியில் போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஜே.டி.பி. வங்கியின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததையடுத்து, அந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டது. இந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்துக்கு அந்நாட்டு ரிசர்வ் வங்கி உறுதி அளித்தது. அவர்களுக்குரிய பணம் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரியாத் சலாமே கூறினார்.

அந்த வகையில், ஹஜ் வாபா முகமது அவத்துக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து 3.3 பில்லியன் லெபனான் பவுண்டுக்கான (இந்திய மதிப்பில் ரூ.6 கோடியே 37 லட்சம்) 2 காசோலைகள் வழங்கப்பட்டன. இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து ஹஜ் வாபா முகமது அவத் கோடீசுவரி என்பது தெரிந்து, அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுபற்றி அந்த மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஹனா என்பவர் கூறும்போது, “ஹஜ் வாபா முகமது அவத் பிச்சைக்காரி என்றே நினைத்திருந்தோம். கடந்த 10 வருடமாக மருத்துவமனை வாசலில்தான் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை இந்தப் பகுதியில் எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் கோடீசுவரி என்ற செய்தி வெளியானது மூலம் அவர் இந்த நகரம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்” என கூறினார்.