பிக்கு சிறார்களை தாக்கியவருக்கு விளக்கமறியல்!

புதன் செப்டம்பர் 11, 2019

ஹொரவிபொத்தானை விகாரை ஒன்றில் பிக்கு சிறார்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சமிந்த கலபொட என்பவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நபரொருவர் பிக்கு சிறார்கள் இருவர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் காணொளி சமூக வளைத்தளங்களில் வெளிவந்திருந்தன. இதன் பின்னர் இந்த காணொளி காட்சியை சில ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. 

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய காவல் துறை  விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் சந்தேக நபர் நேற்று மாலை ஹொரவ்ப்பொத்தானை காவல் துறையினர்  கைது செய்யப்பட்டிருந்தார்.

ஹொரவப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த உட்டியா என அழைக்கப்படும் , சமிந்த கலபொட என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவத்தின் போது தாக்குதலுக்குள்ளான பிக்குகள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக காவல் துறை  ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

இந்நிலையில் குறித்த பிக்குகள் தமக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் பொருளை திருடியமையின் காரணமாகவே அவர்களை தாக்கியதாக சந்தேக நபர் விசாரணைகளின் போது தெரிவித்தாக தெரியவந்துள்ளது.