பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா!

வியாழன் அக்டோபர் 31, 2019

பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த (27.10.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக இடம்பெற்றது.

மங்களவிளக்கேற்றலினைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி  அவர்களினதும் அண்மையில் சாவடைந்த பிரான்சின் முன்னாள அதிபர் ஜாக் ஷெராக் அவர்களினதும் திருவுருவப் படங்களுக்கான ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி  அவர்களின் புதல்வி ஏற்றிவைக்க, மலர்மாலையினை நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களின் துணைவியார் அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆர்ஜொந்தை மாநகர பிதா Georges Mothron மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Philip Doucet  ஆகியோரும் சிறப்புவிருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தனர். அவர்கள் மேடையில் பொன்னாடை போர்த்தி மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.

தமிழ்ச் சோலை கீதம் இசைக்கப்பட்டு நிறைவடைந்ததும், வரவேற்புரை இடம்பெற்றது.தொடர்ந்து மாணவர்களின் தமிழ்க் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் அரங்க நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு பெருவிருந்தாக அமைந்திருந்தன.

எண்ணற்ற பல்வேறுபட்ட நடனங்கள், நாடகங்கள், பாடல்கள், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, கவிதை என மாணவர்களின் அரங்க ஆற்றுகைகள் சலிப்பின்றித் தொடர்ந்திருந்தன.

ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பொருத்தமான பின்னணிக் காட்சிகள் பல வண்ணங்களில் பாரிய தொலைக்காட்சியில் காணொளியாக காட்சிப்படுத்தியமை நிகழ்வுகளை மேலும் சிறப்பாக்கியிருந்தன.

வளர் தமிழ் 12 இனை நிறைவுசெய்த மாணவர்கள் மற்றும் தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டதுடன், நீண்டகாலமாக ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை நிர்வாகியாகப் பணியாற்றிவரும்  திருமதி பவளராணி மாணிக்கராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுக்கேடயம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் சிறப்பு மலரும் நிகழ்வில் வெளியிட்டுவைக்கப்பட்டது. சிறப்பு மலரை அரங்கில் பலரும் பெற்றுக்கொண்டனர்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தபோதிலும், இந்த முகம்களை இதே ஆர்ஜொந்தை மண்ணிலே அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்;  தூபியின் முன்பாக வருடா வருடம் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்விலும் கண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கேட்டுக்கொண்ட அவர் மாணவர்களின் ஆற்றுகைகளை வியந்து பாராட்டியிருந்தார்.

ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் பழைய மாணவ மாணவிகள் இணைந்து 'இப்படியும் நடக்கின்றது" என்ற நாடகத்தை அரங்கேற்றியிருந்தனர். குறித்த நாடகம் புலம்பெயர் மண்ணில் எம்மவர்களின் ஆடம்பரமான போட்டிபோடும் வாழ்க்கை முறைகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருந்தனர். இவர்களின் நடிப்பாற்றல் குறித்த பள்ளியின் சிறப்பை பறைசாற்றி நின்றது. இது மட்டுமல்லாமல் அனைத்து நிகழ்வுகளிலும் மாணவர்களின் ஆற்றுகைகள் சிறப்பாக அமைந்திருந்தன. நிறைவாக தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு, நன்றியுரைக்கப்பட்டதும் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுகண்டன. 

ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் பழைய மாணவர்களே தமிழ் மக்களின் கலாசார உடையோடு, தமது அறிவிப்புத் திறமையால் அனைத்து நிகழ்வுகளையும் கொண்டுசென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.