பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை நடாத்திய பொங்கல் விழா!

ஞாயிறு சனவரி 26, 2020

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் தமிழ்ச்சோலையின் பொங்கல் விழா 19.01.2020 அன்று ஞாயிற்றுக் கிழமை ஸ்ராஸ்பூர்க் salle de la bourse மண்டபத்தில் காலை 11.30மணி அளவில் ஆரம்பமாகியிருந்தது.

வழமைபோன்று கதிரவனுக்கு பொங்கல் பொங்கி படைக்கும் நிகழ்வை தமிழ்ச்சோலை ஆசிரியர் திரு. ம. தலீபராஜா, திருமதி. கன்சிகா தலீபராஜா தம்பதியினர் நடாத்தியிருந்தனர்.

பிரதமவிருந்தினர்களாக ஸ்ராஸ்பூர்க் நகரமேயர் சார்பாக சூசான் கெம்வ் அவர்கள், பாராளுமன்ற ஆலோசனை உறுப்பினர் திரு.மோறர் அவர்கள், சில்ரிகைம் நகர மேயர் அவர்கள், பச்சைக் கட்சியின் சார்பில் திருமதி. முன்சன்பாக் அவர்கள், அருட்தந்தை கலான் அவர்கள்,   ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நகர தமிழ் உறவுகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், கவிதை அரங்கம், காத்தவராயன் கூத்து, பாடல்கள் போன்ற கலை, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அதிலும் தமிழ்ச்சோலை ஆசிரியர்களால் நடாத்தப்பட்ட கவியரங்க நிகழ்வானது, தாயகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பொங்கு தமிழ் நிகழ்வுக்கு வலுச் சேர்க்கும் முகமாகவும், இந்த வருடம் தமிழ் மக்களுக்கு விடியலைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் எனவும் “பொங்கு தமிழே பொங்கு” என உணர்வுபூர்வமாக இடம் பெற்றிருந்தது.

h

அதனைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான காத்தவராயன் கூத்து இடம் பெற்றிருந்தது.  தாயகத்தில் இக்கலைகள் இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலையில் இருக்கும் போது, ஸ்ராஸ்பூர்க் தமிழ்ச்சோலை மாணவர்கள் மிகசிறப்பாக இக் கலை நிகழ்வை நடாத்தியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ஆசிரியரகள்; மதிப்பளிப்பு நிகழ்வும் இடம் பெற்றிருந்தது. மண்டபம் நிறைந்த மக்கள் இப் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே பொங்கல் விழா நிறைவுக்கு வந்தது.