பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமருக்கு எதிர்ப்பு!

ஞாயிறு செப்டம்பர் 08, 2019

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரெக்சிட் நடைமுறைகளில் பிரிட்டன் பிரதமரின் முடிவையும் 21 எம்.பி.க்கள் பதவி நீக்கத்தையும் எதிர்த்து ஆம்பர் ருட் மந்திரி பதவியை ராஜிமாமா செய்தார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து  விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது.

அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
அதன்பின், இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

இதற்கிடையில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி  பிலிப் லீ, லிபரல் டெமாகிரட்ஸ் கட்சியில் இணைந்தார். இதனால், பாராளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் தனது பெரும்பான்மையை இழந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பிரெக்சிட் விவகாரத்தில் கடந்த 4-ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதா தொடர்பாக பாராளுமன்ற பொது அவையில் விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்குப் பின்னர் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 327 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் கிடைத்தன.

 

பிரிட்டன் பிரதமருடன் ஆம்பர் ருட்


இதன்மூலம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை, சமீபத்தில் நீக்கப்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து முதல் கட்டத்தில் தோற்கடித்தனர்.

இந்த மசோதாவிற்கு மேல்சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதேபோல் அடுத்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவை எதிர்த்து லண்டன்  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்குக்கு முன்னாள் பிரதமர் ஜான் மேஜர் தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் ஜான் மேஜர் தலைமையிலான மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த பெண் மந்திரி தொழிலாளர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மந்திரி ஆம்பர் ருட் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

மந்திரி பதவியுடன் சேர்த்து பாராளுமன்ற ஆளும்கட்சி கொறடா பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள ஆம்பர் ருட், ‘21 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஜனநாயகத்தின் மீதும் அடிப்படை நாகரிகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்’ என தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற அரசியல் ரவுடித்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.