‘புலிகளின் கைகளில் குருதிக்கறை’ – கலைந்தது விக்னேஸ்வரனின் புலித்தோல் வேசம்! வெளிவந்தது அந்தரங்க மின்னஞ்சல்!

செவ்வாய் ஜூலை 23, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் குருதிக்கறை படிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தித் தனக்கு நெருக்கமான ஒருவருக்கு முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அனுப்பிய அதிர்ச்சி மின்னஞ்சல் சங்கதி-24 இணையத்தின் கரங்களுக்குக் கிடைத்துள்ளது.

 

Wigneswaran

 

அற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலக வல்லாதிக்க சக்திகளிடம் விலைபேசி விற்கும் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கு மாற்றீடாகத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஓர் அரசியல் தலைமை தாயகத்தில் தோன்றாதா என்று கடந்த பத்தாண்டுகளாக உலகத் தமிழர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தவர் கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைக்கான முதன்மை வேட்பாளராக சம்பந்தர் அவர்களால் 2013ஆம் ஆண்டு விக்னேஸ்வரன் அவர்கள் அறிவிக்கப்பட்டதும் விக்னேஸ்வரன் செய்த முதல் வேலை, ஈழப்பிரச்சினையில் தமிழக மக்கள் தலையிடக் கூடாது என்றும், புலம்பெயர் தமிழர்களை ஒதுங்கியிருக்குமாறும் அறிவுரை கூறியது தான்.

இதன் மூலம் தமிழக – புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு விக்னேஸ்வரன் ஆளாகினார். ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாறு தெரியவில்லை என்றால் மாவை சேனாதிராஜாவிடம் அதனைக் கேட்டறிந்து கொள்ளுமாறு ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் அறிவுரை வழங்க வேண்டிய நிலையில் அன்று விக்னேஸ்வரன் அவர்கள் இருந்தார்.

எனினும் தேர்தல் பரப்புரைகள் தொடங்கியதும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தேசியத் தலைவரை மாவீரன் என்று மேடைகளில் அறிவித்து வாக்குப்பிச்சை பெற்றார் விக்னேஸ்வரன்.

இதன் மூலம் எதிர்பார்த்த வெற்றியையும் விக்னேஸ்வரன் பெற்றார்.

இதன் பின்னர் அந்தர் பல்டி அடித்துத் தனது சுயரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கிய விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அலரி மாளிகை சென்று அங்கு மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பின்னர் வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமன விவகாரத்தில் மகிந்தரோடு அதிகார முரண்பாடு ஏற்பட, ‘அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில் பிரபாகரன் போல் மகிந்த ராஜபக்ச நடந்து கொள்கின்றார்’ என்று தேசியத் தலைவரைப் பொது மேடையில் இழிவுபடுத்தித் தனது காழ்ப்புணர்ச்சியையும், புலியெதிர்ப்பையும் விக்னேஸ்வரன் காண்பித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்பதை உறுதிசெய்யும் தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் ரெலோ இயக்கத்தின் மாகாண சபை உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம் கொண்டு வந்த பொழுது, அவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக ஆட்சேபித்த விக்னேஸ்வரன், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பிற்கு நிகரானது என்று தீர்மானத்தில் திருத்தம் செய்யுமாறு வற்புறுத்தி, திருத்தப்பட்ட தீர்மானத்தையே நிறைவேற்றினார்.

ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை விலைபேசி விற்கும் இரா.சம்பந்தன், மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் ஆகியோர் போன்றே அக்காலகட்டத்தில் விக்னேஸ்வரனும் நடந்து கொண்டார்.

இது சம்பந்தருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் தேனிலவு நடந்த காலம். ஆனால் சில மாதங்களிலேயே இருவரின் தேனிலவும் கசந்தது.

இதற்கான காரணம் பலருக்குப் புரியவில்லை. பின்னர் தான் அரசல் புரசலாகத் தகவல்கள் கசியத் தொடங்கின. தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியைத் தனக்குத் தருமாறு சம்பந்தரிடம் விக்னேஸ்வரன் கேட்டிருக்கிறார். அதனை அடியோடு நிராகரித்த சம்பந்தர், அப் பதவியை மாவை சேனாதிராஜாவிற்கு வழங்குவதற்கு தான் உறுதி அளித்திருப்பதாகவும், ஏற்கனவே வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரனுக்கு வழங்கியதால், தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை அவருக்கு வழங்க முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அவ்வளவு தான்.

சம்பந்தருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் பனிப்போர் மூண்டது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக முன்னர் கதையளந்த விக்னேஸ்வரன், மீண்டும் அந்தர் பல்டி அடித்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்புத் தான் என்று அடித்துக் கூறி 10.02.2015 அன்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அன்று முதல் தமிழீழ மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரத் தொடங்கிய விக்னேஸ்வரன், அடுத்தடுத்து உலகத் தமிழர்களைப் புளகாங்கிதப்படுத்தும் அறிவித்தல்களை வெளியிடத் தொடங்கினார்.

தனது பழைய புலியெதிர்ப்பு அரசியலை விக்னேஸ்வரன் கைவிட்டு விட்டார், மனம் திருந்தி விட்டார், தமிழ் மக்களின் விடிவிற்காகத் தள்ளாத வயதிலும் தன்னை உண்மையாக அர்ப்பணித்து செயற்படத் தொடங்கி விட்டார் என்றெல்லாம் உலகத் தமிழர்கள் கனவில் மிதந்தார்கள்.

நாமும் அவ்வாறே நம்பினோம்.

ஈழத்தீவில் மீண்டும் தேர்தல் திருவிழாக்களுக்கான ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் நலன் கருதி விக்னேஸ்வரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஓரணியாகக் கூட்டணி அமைத்து எதிர் வரப்போகும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்ற கருத்து உலகத் தமிழர்களிடையே ஏற்படத் தொடங்கியது. இதேபோன்ற கருத்து தாயகத்தில் வாழும் மக்களிடையேயும் வலுவடையத் தொடங்கியது.

இங்கு தான் சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தனது அணியில் இருந்தால் தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடன் தான் அரசியல் கூட்டணி அமைக்க முடியும் என்று விக்னேஸ்வரன் விடாப்பிடியாக நின்றார்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் காலத்தில் தாயகத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த இந்திய ஒட்டுக்குழு ஈ.பி.ஆர்.எல்.எவ். இவ் ஒட்டுக்குழுவின் கொலைக்குழுவாக விளங்கிய மண்டையன் குழுவிற்குத் தலைவராக விளங்கியவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்.

அப்படிப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரனுக்குப் பொதுமன்னிப்புக் கொடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அவர் இணைவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி வழங்கினார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனும் தான் திருந்தி விட்டது போல் நடந்து கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குநிலையில் இருக்கும் வரை அப்படித்தான் அவர் நடந்து கொண்டார்.

18.05.2009 இற்குப் பின்னர் எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கியது. தனது சுயரூபத்தை மீண்டும் காண்பிக்கத் தொடங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தியாவின் கைப்பாவையாக இயங்கத் தொடங்கினார்.

இவ்வாறான ஒருவரை மடியில் கட்டிக்; கொண்டு விக்னேஸ்வரன் அரசியல் செய்ய முற்பட்டதானது அவரது நிகழ்ச்சித் திட்டம் பற்றிய பல்வேறு கேள்விகளை தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடையே தோற்றுவித்தது.

இவ்வாறான பின்புலத்தில் தான் கஜேந்திரகுமாருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் சமரசம் செய்யப் போவதாகக் கூறி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கலாநிதி முருகர் குணசிங்கம் என்பவர் களத்தில் இறங்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால் முருகர் குணசிங்கம் அவர்கள் கஜேந்திரகுமாரைக் காட்டமாக விமர்சிக்கும் ஒருவர். 2012ஆம் ஆண்டு தான் வெளியிட்ட நூலில் கஜேந்திரகுமார் மீது வசைபாடும் அளவிற்கு முருகர் குணசிங்கத்திற்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சி. அப்படிப்பட்ட ஒருவர் எப்படி நடுநிலையாளராக, நேர்மையான சமரசப் பேச்சுவார்த்தையாளராக இருக்க முடியும் என்ற கேள்வி அப்பொழுதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடையே ஏற்பட்டது.

இது இவ்விதம் இருக்க, விக்னேஸ்வரனுடன் கஜேந்திரகுமார் கூட்டணி அமைக்கத் தவறினால் அவருக்குப் புலம்பெயர் தேசங்களில் இருந்து எந்த ஆதரவும் வழங்கப்பட மாட்டாது என்று சில மாதங்களுக்கு முன் தமிழ் இணையத்தளம் ஒன்றை இயக்கும் முன்னாள் போராளி ஒருவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

இவ்வாறான பின்புலத்தில் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் குருதிக்கறை படிந்திருப்பதாகக் குறிப்பிட்டுத் தனக்கு நெருக்கமான ஒருவருக்கு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் சங்கதி-24 இணையத்தின் கைகளுக்கு கிட்டியிருக்கின்றது. இம் மின்னஞ்சல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நீண்ட காலமாகத் தான் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியை விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார்.

தமது உயிரை வேலியாக்கித் தமிழர்களின் அரசியல் சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று இயங்குநிலையில் இல்லை. இவ்வாறான விமர்சனத்தை விக்னேஸ்வரன் முன்வைப்பதாக இருந்தால், அதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குநிலையில் இருந்த காலத்தில் முன்வைத்திருக்க வேண்டும். அல்லாது போனால் எதிர்காலத்தில் இயங்குநிலைக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் திரும்பினால், அச்சந்தர்ப்பத்தில் அதனை முன்வைக்க வேண்டும்.

அதனை விடுத்து இவ்வாறு விக்னேஸ்வரன் அவர்கள் நடந்து கொள்வது, பதில் கூறுவதற்கு எவருமே வரமாட்டார்கள் என்ற துணிச்சலில் இவ்வாறு அவர் நடந்து கொள்கின்றாரா? என்ற கேள்வியையே எழுப்பி நிற்கின்றது.

கூடவே இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியுடன், கொண்ட கொள்கையில் உறுதிமிக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், அவரது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இனியும் கூட்டணி அமைக்க வேண்டுமா? என்ற கேள்வியும் உலகத் தமிழர்களிடையே எழுகின்றது.

பூனையில்லா ஊரில் எலிகளுக்குக் கொண்டாட்டம் தான். அதற்காகப் புலிகள் இல்லாத ஊரில் புலிகள் போல் பாசாங்கு செய்யும் எலிகளைக் கண்டு மதிமயங்கிப் போகத் தமிழர்கள் என்ன ஏமாந்த சோணகிரிகளா?

- கலாநிதி சேரமான்