புள்ளடி மட்டுமல்ல கைதட்டலும் பயனற்றுப் போனது?

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

தமிழ் மக்களின் நிலைபற்றி நினைக்கும் போதெல்லாம் ஏன் தான் இந்த நிலைமை என்று எண்ணத் தோன்றும்.

அந்தளவுக்கு எங்கள் தமிழ் இனம் ஏமாற்றப்படுகிறது. தோற்றுப்போகிறது.கிடைக்க இருப்பதையும் இழந்து போகிறது.

சந்தர்ப்பங்களை நாமாகவே தவறவிடுகின்றோம்.இந்த நிலைமை நீண்டு செல்வதைப் பார்க் கும்போது இதைத்தான் விதி என்று நம்மவர்கள் வகுத்துக் கொண்டனரா என்று எண்ணத் தோன்றும்.

ஆம், எங்கள் உரிமைப் போராட்டம் உச்சமடைந்து வெற்றி நிச்சயம் என்றபோது, சர்வ தேசம் எங்களுக்கு ஈனம் செய்தது.

எந்த நாடெல்லாம் எங்களைக் காப்பாற்றும் என்று நம்பினமோ அந்த நாடுகள்தான் எங்களைக் கொல்வதற்கும் அழிப்பதற்கும் ஆயுதங்கள் அனுப்பின என்றறிந்தபோது,

இறைவா! என்றுரைப்பதைத் தவிர வேறு வார்த்தையை கூறமுடியவில்லை.

இதுதான் என்றால், இல்லை. எங்கள் இனத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நம்பி; நடந்தும் கிடந்தும் தவழ்ந்தும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று புள்ளடி போட்டோம்.

எங்கள் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றவர்கள் எங்களுக்குத் துரோகம் இழைத்தனர்.

யுத்தத்தில் துடிக்கத் துடிக்க உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஆறுதல் இல்லாத அவலத்தைப் புரிந்தனர்.

அந்தோ பச்சிளம் பாலகனை அழைத்துச் சென்று இனிப்புப் பண்டம் கொடுத்து விட்டு, அவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஈனத்தை சனல் 4 காணொளி சாட்சியப்படுத்தியபோதும் எல்லாவற்றையும் மறந்த நம் அரசியலாளர்கள் ஈனர்களின் வால் பிடிக்கத் தலைப்பட்டனர்.

அதுவே எங்களுக்கான விமோசனம் என்று நம்பிகேடு செய்தனர்.இத்தோடு இக்கதிபோகுமென்றால், இல்லை அங்கே இலங்கையின் கிரிக்கெட்டில் எங்கள் இனத்தவன் என்று நாம் பெருமைப்பட்டு, அவன் பெற்ற வெற்றியயல்லாம் எம் இனம் பெற்ற வெற்றி என்று மகிழ்ந்து நெகிழ்ந்து அன்பு மேலீட்டால், கைதட்டி கரகோசம் செய்தோமல்லவா?

அதோ! அந்த விளையாட்டு வீரன் ஒரு கணப் பொழுதில் தமிழர் இதயங்களைத் தீயிட்டுக் கொளுத்துகிறான். என்னே கொடுமை. சிங்களவர்களுக்கு விசுவாசம் காட்டுவதற்காய் வாலாட்டுவதாய் நினைத்து சொல்வதென்றால், அதற்கு எத்தனையோ இருக்கிறது.

அதைவிட்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தன் வாழ்க்கையில் முக்கிய மான நாள் என்று முத்தையா மகன் சொன்ன போது, இதுதான் ஈழத் தமிழர்களின் தலைவிதி என்று எண்ணுவதைவிட வேறு என்ன தான் செய்ய முடியும்.

எது எவ்வாறாயினும் என்று எங்கள் இனம் மெய்ப்பொருள் காண்கிறதோ அன்றுதான் விடிவும் வெளிச்சமும் நமக்காகும்.

நன்றி.வலம்புரி