ராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு!

ஞாயிறு டிசம்பர் 15, 2019

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 1000 பேரை சிறிலங்கா கடற்படை விரட்டியடித்தது.

ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 1000 பேர் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க புறப்பட்டனர்.

அவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் படகுகளில் ரோந்து வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களிடம் நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

மீனவர்கள் படகுகளை கரையை நோக்கி திருப்புவதற்கு முன்பாகவே கடுமையாக எச்சரித்தனர். உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டினர். உயிர் பிழைத்தால் போதும் என நினைத்த மீனவர்கள் அவசரம், அவசரமாக கரை திரும்பினர். சிறிலங்கா  கடற்படை அட்டூழியத்தால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.