ரோஹிங்கியா அகதி முகாமில் முதல் கொரோனா தொற்று

வெள்ளி மே 15, 2020

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ள நிலையில், அங்கு முதல் கொரோனா கிருமித் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்று பேரழிவாக உருவாகக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

முகாமில் உள்ள ஒரு ரோஹிங்கியா அகதியை தவிர்த்து, அங்கு உள்ள மற்றுமொரு நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வங்கதேச அதிகாரி ஒருவரும் ஐ.நா. பேச்சாளரும் தெரிவித்துள்ளனர்.  உலகில் உள்ள நெரிசல் மிகுந்த நகரங்களை விட இம்முகாம்கள் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகயாக இருந்து வருகின்றது.  

இந்த சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அகதிகள் நிவாரண ஆணையர் மஹ்பூப் அலம் தலுக்தர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில், வங்கதேசத்தில் 18,863 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. 283 பேர் தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர். 

“வங்கதேசத்தில் உள்ள 160 மில்லியன் மக்களுக்கு 2,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே இருக்கின்றன. சுமார் பத்து லட்சம் ரோஹிங்கியா அகதிகள் உள்ள முகாம்களில் ‘தீவிர சிகிச்சைக்கான எந்த படுக்கைகளும்(Intensive care beds) இல்லை,” என Save the Children அமைப்பின் வங்கதேச சுகாதார இயக்குனர் மருத்துவர் ஷமிம் ஜஹன் தெரிவித்துள்ளார். 

முகாம்களில் தேவையான சுகாதார பணியாளர்களோ அதற்கான இடமோ இல்லை எனக்கூறும் சர்வதேச மீட்பு கமிட்டியின் வங்கதேச இயக்குனர் மனிஷ் அகர்வால், முகாம்களில் உள்ளவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போதுமான சோப் மற்றும் தண்ணீர் இல்லை எனக் கூறியுள்ளார்.