தேசியத்தலைவர் படத்துடன் பாடல் வெளியாகிய திரைப்படத்துக்கு தடை!

ஞாயிறு செப்டம்பர் 08, 2019

குக்கூ மற்றும் ஜோக்கர் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூமுருகனின் அடுத்த படைப்பான ஜிப்ஸி படத்தில் ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட உருவாக்கம் முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்ட படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்தும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.தமிழகத்தில் மக்கள் நலனுக்காக போராடும் தலைவர்களை முன்னிறுத்தி பாடல் காட்சிகளில் அவர்கள் தோன்றும் வண்ணம் அமைத்திருந்தார் இயக்குனர் ,

மற்றும் அந்த பாடல் காட்சிகளில் நீதிமன்றத்தில் இருந்து சட்டத்தை எதிர்த்து பாடுவதாகவும் காட்சி அமைத்து அதன் பின்னணியில் பெரியார் தேசியத்தலைவர் பிரபாகரன் போன்ற தலைவர்களையும் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது படக்குழு மும்பை தணிக்கை தீர்ப்பாயத்தை அணுகியுள்ளதாக தெரிகிறது.

தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதற்கு படத்தில் ஆர்எஸ்எஸ்-இன் வலதுசாரி கருத்தியலை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதே காரணமாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் ராஜூமுருகனின் சமூகப் பற்றும் படைப்புச் சிந்தனையின் நேர்மையும் நாடறிந்தது. தனது ஜோக்கர் படத்தின் மூலம் அரசியல் மற்றும் சமூகத் தளத்தில் புரையோடிப்போன வறட்டு அதிகார, ஊழல் போக்கை தோலுரித்ததோடு, எளிய மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை தமது படைப்புகளின் வழியே தொடர்ந்து பேசி வருபவர்.

ஜோக்கர் படைப்புக்காக தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.