தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி!

வெள்ளி நவம்பர் 08, 2019

சிறிலங்காவின் தென்பகுதியில், பாதுக்க கலகெதர பிரதேசத்தில் நேற்றிரவு (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்குள்ள மதுபான சாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய தர்ஷன லசந்த என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தார் என காவல்துறை தெரிவித்தது. 

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மதுபானசாலையில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.  

சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியானார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நேற்று முன்தினம் எஸ்.பி.திஸ்ஸநாயக்காவின் மெய்ப் பாதுகாவலர்கள் முதலாவது துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அதில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்தனர். 

நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.