தேர்தல் புறக்கணிப்பு இப்போது சாத்தியமா?

செவ்வாய் அக்டோபர் 15, 2019

தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் கொடுக்காத, எந்த அனுகூலங்களையும் பெற்றுக்கொடுக்காத ஜனாதிபதித் தேர்தலுக்காக சிங்கள தேசம் களை கட்டியிருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் காதுகளுக்கு அமுத ரசம் ஊட்டி அவர்களை மதி மயக்கும் செயற்பாடுகள் தீவிரமாக ஆரம்பமாகியிருக்கின்றன. சோரம்போன தமிழ் அரசியல்வாதிகளை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் வேலைத்திட்டங்கள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அனைத்தையும் அறிந்தும் ஏதும் அறியாத அப்பாவிகள் போல தமிழ் அரசியல்வாதிகள் சிலர் சிங்கள சேனைக்கு சாமரம் வீசும் செயற்பாடுகளையும் தொடங்கியிருக்கின்றனர்.

இந்து சமுத்திரத்தின் நித்திலம் என வர்ணிக்கப்படும் 65 ஆயிரத்து 610 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இலங்கைத் தீவில் தேர்தல் திருவிழாவுடன் தமது கால்களைப் பலப்படுத்த பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியா, சீனா, யப்பான் மற்றும் மேற்கு நாடுகளும் களத்தில் இறங்கியிருக்கின்றன.

சிறீலங்காவில் ஒவ்வொரு தடவையும் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தல்களின்போது பன்னாடுகளின் ஆதிக்கம் இருந்ததைப் போல இப்போதும் சிறீலங்காவை நோக்கி பன்னாடுகளின் பார்வை அதிகரித்திருக்கின்றது.

அதிலும் அமெரிக்காவின் கழுகுப் பார்வையும் சீனாவின் ஆதிக்கப் பார்வையும் அதிகமாகியிருக்கின்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறீலங்காவை எப்படி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து தமது நலன்களை அடையலாம் என்பதிலேயே சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பியிருக்கின்றது.

சிறீலங்காவில் இந்தியாவை மீறி எந்த அணுவும் அசையாது என்பது தற்போது பழங்கதையாகிவிட்டது.  சிங்களக் கடும்போக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அவர் இந்தியாவுடன் நட்புறவைப் பேணிய அதேவேளை, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனும் அதிக நட்பைத் தொடர்ந்தார்.

அவரது ஆட்சியில் இந்தியாவின் பிடி குறைந்து சீனாவின் நட்பு அதிகரித்தது. அடுத்துவந்த மைத்திரிபால சிறிசேனவும் அந்த நட்பை முறிக்க முடியாதவராக தொடர்ந்தார். தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் திரும்பவும் மகிந்த கம்பனியைக் கொண்டுவரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது.

நிற்க, சிறீலங்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தல்களின்போது இருபெரும் பிரதான அரசியல் கட்சிகளே மாறி மாறி தமது வேட்பாளர்களை நிறுத்தி ஆட்சியைக் கைப்பற்றி வந்தன. தமிழகத்தில் தி.மு.க - அ.தி.மு.க போன்று சிறீலங்காவில் ஐ.தே.க - சி.சு.க ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வந்தன.

ஆனால், இம்முறை (2019) மூன்றாவது பலம்மிக்க அரசியல் கட்சி ஒன்று தோற்றம் பெற்றிருக்கின்றது. அது மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியாகும். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சி நிறைவுக்கு வந்த பின்னர், அவர் வகித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி அடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசமானது.

இதனால் ஆட்சி அதிகாரத்தில் வெறிகொண்ட மகிந்த ராஜபக்ச தனது விசுவாசிகளை இணைத்துக்கொண்டு சிறீலங்கா பொதுஜன பெரமுன என்ற பலமான, மூன்றாவது அரசியல் அணி ஒன்றை தென்னிலங்கையில் நிறுவினார்.

எனினும் பெரும் முரண்பாடுகளைக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தலைவராகக் கொண்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறீலங்கா பொதுஜன பெரமுனவும் தற்போது ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு  இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டதன் மூலம் இணைந்து செயற்படத் தீர்மானித்திருக்கின்றன.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்கனவே கூறப்பட்டதைப் போன்று கோத்தபாய ராஜபக்ச நியமிக்கப்பட்டார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் இழுபறிகள் நடைபெற்றன. பெரும் குழிபறிப்புக்கள், குத்துவெட்டுக்களுக்கு பின்னர் சஜித் பிரேமதாசா ஐ.தே.கவின்  ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்களத் தலைவர்கள் எவரும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கமாட்டார்கள்.

தேர்தல்களின்போது இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்போம் எனக் கூறி ஆட்சிக்கு வருவதும் பின்னர் சிங்கள மேலாதிக்கத்துடன் செயற்படுவதுமே அவர்களின் வழக்கமான நிலைப்பாடு.

சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க முதன் முதலில் ஆட்சிக்கு வந்தபோது தமிழீழ விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்தது. அவர் சமாதான தேவதையாகத் தன்னைக் காட்டிக்கொண்டு வந்தார். சில வருடங்களில் செம்மணி படுகொலை நிகழ்த்தியது தொடக்கம் பல்வேறு படுகொலைகளின் நாயகியாக இன்று வலம்வருகின்றார்.

இதேபோன்றுதான் ஏனைய ஜனாதிபதிகளும் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர். ஆக, எந்தச் சிங்களவர்களையும் தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எந்தச் சிங்களவர் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.

ஆனாலும் இந்த தேர்தலில் தமிழர் தரப்பு இராஜதந்திரத்துடன் செயற்படவேண்டும்.

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அவருக்கு வாக்களித்து தமிழ்த் தேசியத்தினதும் தமிழ்த் தேசத்தினதும் வேணவாக்களை சர்வதேசத்தின் காதுகளுக்கு எடுத்துச் செல்லமுடியும் என சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அதை தமிழ்த் தரப்புக்கள் சாத்தியப்படுத்தவில்லை.

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளையும் தராத இந்தத் தேர்தலை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

அந்தக் கட்சியின் பார்வையில் இந்த முடிவு சரியாகத் தோன்றினாலும் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு இது பெரும் பாதகமான நிலையை ஏற்படுத்தலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையை, இலட்சியத்தை இன்றுவரை முன்னெடுத்துச் செல்லும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வாழும் தமிழ் மக்கள் நம்புகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிக் கட்சிகளும் சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழுக்களாக மாறி தமிழ் மக்களின் இலட்சியத்தை விட்டுக்கொடுத்துள்ள நிலையில், இன்றளவும் தமிழீழ விடுதலைக்கான தேசியக் கொள்கையைக் கைவிடாமல் தனது செயற்பாடுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்து வருகின்றமை அனைவராலும் மெச்சப்படுகின்றது.

மாவீரர்களின் கனவுகளைச் சுமந்து, தமிழ்த் தேசத்தின் இறையாண்மையைக் கட்டிக்காக்க வேண்டிய பெரும் பொறுப்பு அந்தக் கட்சிக்கு இருக்கின்றது. அக்கட்சியின் இளைஞர்களும் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலை அச்சமின்றி, சாதுரியமாக முன்னெடுத்து வருகின்றமைக்கு அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் சாட்சியங்களாக இருக்கின்றன.  

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடு அவர்களின் எதிர்கால அரசியலைப் பாதிக்கும். ஏனெனில், இந்தத் தேர்தலை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் புறக்கணிக்கும் நிலையில் இல்லை என்பது கள யதார்த்தமாகும்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் ஏறத்தாள 10 இலட்சம் வரையான தமிழ் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 75 வீதத்திற்கு அதிகமானோர் வாக்களிப்பில் ஈடுபடாமல் இருப்பார்களேயானால் அதுவே தமிழ்த் தேசத்தின் வெற்றியாகும். அதன்மூலமே தமிழ் மக்கள் சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்ற செய்தியை உலகுக்கு வெளிப்படுத்த முடியும்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அப்போது புறக்கணித்தனர். தேசியத் தலைவரின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்தனர். தேசியத் தலைவர் மீதும் புலிகள் மீதும் தமிழ் மக்கள் கொண்டிருந்த பற்று, தமிழீழ விடுதலை மீது அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, மாவீரர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த மரியாதை என்பவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடே அது.

இன்றும் தேசியத் தலைவர் வெளியே வந்து மக்கள் முன் தோன்றி, தேர்தலைப் புறக்கணியுங்கள் எனக் கூறினால் மக்கள் அதைச் செய்யத் தயாராகவே இருக்கின்றனர்.

அதை விடுத்து வேறு எவரின் கருத்துக்களுக்கும் மக்கள் செவிசாய்ப்பார்கள் என நம்புவது சரியான கணிப்பீடு அல்ல.

மேலும், தமிழர் தாயகத்தின் நிலமை தற்போது மிகவும் வேறாகிவிட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். வசிப்பதற்கு வீடு இல்லை, தொழில் இல்லை. கணவன் கடத்தப்பட்டு காணாமற்போன குடும்பங்கள், போரில் குடும்பத் தலைவர் கொல்லப்பட்டுள்ள குடும்பங்கள், அங்கவீனமானவர்கள், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் போன்றோரின் இலட்சக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவுக்கே அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.

இதைவிட படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மேற்படி குடும்பங்களை இலக்குவைத்தே தேர்தல் பிரச்சார அணிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வடக்கில் கோத்தபாய ராஜபக்சவுக்காக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு, அங்கஜன் இராமநாதன் தலைமையிலான குழு, ஈரோஸ் குழு மற்றும் இதர சிறு அமைப்புக்களும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன.

சஜித் பிரேமதாசவுக்காக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா தலைமையிலான அணி (பிரதேச அலுவலகங்களில் உள்ள அமைப்பாளர்கள் மூலம்), ராஜித சேனாரட்ணவுக்கு ஆதரவான முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் குழுக்கள்  தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதேபோன்று கிழக்கிலும் ஈ.பி.டி.பி மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மேற்படி கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போதே பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் நெருங்கும்போது அரச உத்தியோகத்தர்களுக்கும் தனியார் துறையினருக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்படலாம். இவ்வாறான நிலையில், தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது கேள்விக்குறியாகும்.

தமிழ்க் கட்சிகள் மீதும் தமிழ் அரசியல்வாதிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்ற நிலையில், தேர்தலைப் பகிஷ்கரிப்பார்கள் என எதிர்பார்ப்பது நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிப்பது என்ற தமது முடிவை இதுவரை அறிவிக்காத நிலையில், அவர்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறே மக்களைக் கேட்டுக்கொள்வார்கள். அந்த அறிவிப்பும் மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் கோத்தபாய ராஜபக்ச மீது கடும் வெறுப்பும் விரக்தியும் கோபமும் கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதியாகத் தெரிவான மறுநாளே சிறைகளில் உள்ள படையினரை விடுவிப்பேன் என கோத்தபாய கொக்கரிப்பில் இருந்தே அவரது ஆட்சி காட்டாட்சியாகவே இருக்கும் என தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த அச்சம் அவர்களை சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கத் தூண்டலாம். இதைப் பொருட்படுத்தாமல் டக்ளஸ், அங்கஜன் ஆகியோரின் பிரச்சாரங்களுக்கு எடுபடும் கூட்டத்தினர், அவர்களின் ஆதரவாளர்கள் என பெரும்பாலானோர் கோத்தபாயவிற்கும் வாக்களிப்பர்.

இந்த நிலையில், மக்கள் அதிகமாக வாக்களிப்பில் ஈடுபட்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கோரிக்கை மக்களால் நிராகரிக்கப்பட்டதாகவே நோக்கப்படும். ஏற்கனவே பல தேர்தல்களில் வீழ்ச்சிகண்ட முன்னணி கடந்த பிரதேச சபைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.

அதன் மூலம் கூட்டமைப்புக்கு அடுத்து பலமான அணி என்ற பார்வையைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால், தேர்தலை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டால் அவர்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம். அவர்களின் கோரிக்கை மக்களால் நிராகரிக்கப்பட்டால் அவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

மேலும், தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ் வெற்றியீட்டினால் வடக்கே யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இரு அமைச்சர்கள் பதவியேற்பார்கள். டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவும் அங்கஜன் இராமநாதன் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்படலாம்.

அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மேலும் பாதிக்கும்.

111

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதிப்பானது தமிழ்த் தேசியத்தினதும் தமிழீழ இலட்சியத்தினதும் பாதிப்பாகவே அமையும். அது உள்நாட்டிலோ ஐ.நா மற்றும் புலம்பெயர் தேசங்களிலோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளில், கருத்தியல் ரீதியான அறிக்கையிடுதல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தத் தேர்தலில் அமைதியாக இருந்திருக்க முடியும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் இல்லை. இதனால் நாம் இதுபற்றி அலட்டிக்கொள்
ளத் தேவையில்லை என இருந்திருக்கலாம். அல்லது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அனைத்துக் கட்சி பங்கேற்பு செயற்பாட்டின் மூலம் பொதுவான அறிக்கை வெளிப்பாட்டோடு நின்றிருக்கலாம்.

அவ்வாறு எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தால், தமிழ்த் தேசியக் கட்சி என்ற அடிப்படையில் மக்களுக்கு உரிய அறிவித்தலை விடுத்து, அவர்களை வழிப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விலகிவிட்டது என விமர்சனங்கள் வரலாம்.

அது குறித்தும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. கட்சி அரசியலை விட, தமிழ்த் தேசியத்தின், தமிழ்த் தேசத்தின் எதிர்காலமே முக்கியம். தமிழீழத் தேசியத் தலைவர் கூறியதைப் போல, நான் பெரிது நீ பெரிது என வாழாமல் நாடு பெரிதென வாழுங்கள். ஏனெனில், நாட்டின் வாழ்வு எமது நிலையற்ற வாழ்விலும் மேலானது.

குறிப்பு :-இக்கட்டுரை கட்டுரையாளரின் கருத்தாக இருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதால் அக்கட்சிக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்தே இங்கு அலசப்படுகின்றது. தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பதால் தமிழினத்திற்கு ஏற்படக் கூடிய அரசியல் நன்மைகள் குறித்து ஈழமுரசு இதழில் தொடர்ந்து அலசப்படும்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு