தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது!!

திங்கள் மே 18, 2020

தேர்தல்களை நடத்துவதுகும் அவற்றை ஒத்திவைப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என்றும் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பொதுத் தேர்தலை நடத்துவது அவர்களின் பொறுப்பு என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்ட அமைச்சர்,எதிர்க்கட்சி பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முயற்சிப்பது மக்கள் மீதான அன்பினால் அல்ல, ஆனால் நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்காகவே என கூறினார்.

மேலும் “தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்தல்கள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்வது ஆணைக்குழுவின் பொறுப்பாகும். எனவே, தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது” என குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தலை நடத்த அவர்கள் செய்ய வேண்டியது சுகாதார அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதுதான் என்றும் கூறினார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் அறிவிப்பின் பிரகாரமே, கடந்த 15 நாட்களாக சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம்”எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.