திலீபன் நினைவு நாளில் 5 அம்சக் கோரிக்கையுடன் உலகத் தமிழினம் எழுச்சிபெற வேண்டும்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

‘விடுதலைப் புலிகள் வாழ வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்’இது தியாக தீபம் திலீபன் கூறிய வாசகம்.

எக்காலம் சென்றாலும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துச் சொல்வதற்கு இந்த வரிகள் போதுமானவை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு இந்த வாசகத்தை விட எதையும் தேடிச்செல்ல வேண்டியதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என விசமப் பிரச்சாரம் செய்பவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்களுக்கும் இந்த வசனம் சாட்டையடி கொடுக்கிறது.

தமிழ் மக்கள் வேறு தமிழீழ விடுதலைப் புலிகள் வேறு எனப் பிரச்சாரம் செய்தவர்களுக்கு தமிழரே புலிகள், புலிகளே மக்கள் என்பதை உணர்த்திய தியாக வேங்கை திலீபன். தமிழர்கள் நிறையுணவை உண்டு, நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரே ஆசைக்காக பன்னிரண்டு நாட்கள் பசியிருந்தவர் திலீபன். அவரது 32 ஆவது வருட நினைவு நாள்களில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழீழக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போரிட்டனர். சிங்கள தேசம் கூறுவதைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் எனில், அவர்கள் ஆயுதத்தை மட்டுமே நம்பி போராட்டத்தை நடத்தியிருப்பர்.

புலிகளுக்கு இருந்த சர்வதேசத் தொடர்புகள் மூலமாக பயங்கர ஆயுதங்களைத் தமிழீழத்திற்கு தருவித்து சிங்கள தேசத்தை சுடுகாடாக மாற்றியிருப்பர்.

புலிகள் தமிழ் மக்களை நேசித்தனர். தமிழீழ தேசியத் தலைவரைப் போன்று தமிழ் மக்களை நேசித்த எவரையும் இதுவரை நாம் கண்டதில்லை.

இனியும் காணப்போவதில்லை. அப்பளுக்கற்ற தேசியத் தலைவரைப் பெற்ற இனம் என்ற ரீதியில் தமிழினம் பெருமை கொள்கின்றது. அந்த தலைவன் வழியில் பயணித்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாட்களில் அவரது கனவு சுமந்து நாம் பயணிக்கின்றோம்.

திலீபன் ஏன் இறந்தான்? அவனது இறப்பின் அர்த்தம் என்ன?

திலீபனை நேசித்த தேசியத் தலைவர் திலீபனின் இறப்புத் தொடர்பாகத் தெரிவிக்கையில்,

திலீபன் உங்களுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக, சுதந்திரத்திற்காக, கெளரவத்திற்காக இறந்தான். தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தைச் செய்யமுடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம் என்பதையும் நான் அறிவேன் எனக் கூறினார்.

உண்மை அதுதான், திலீபன் தமிழ் மக்களின் அடையாளம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கொள்கை விளக்கம்.

32 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இளம் புலி தன்னைத் தமிழ் மண்ணுக்காக அர்ப்பணித்தான். மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும் என திலீபன் கண்ட கனவு சில ஆண்டுகளில் விடுதலைப் போராட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

திலீபனின் மரணத்துடன் தமிழர் தேசம் எழுச்சிகொண்டது. தமிழீழ விடுதலைக்கான போராட்டம் வீச்சுப்பெற்றது.

எனினும், திலீபன் முன்னெடுத்த அகிம்சைப் போராட்டத்தின் தேவை இப்போதும் உணரப்பட்டுள்ளது. ஏனெனில், தியாகி திலீபன் என்ன கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தாரோ அந்தக் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

1. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும்   நிறுத்தப்படல் வேண்டும்.

4. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பாடசாலைகளில் குடி கொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

திலீபனின் இந்த ஐந்து அம்சக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகவே இருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சிங்களச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பெற்றோரும் உறவினர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிங்கள தேசத்தின் மனம் இரங்கவில்லை இடைக்கால அரசு என்ற பேச்சுக்கே இடமின்றி தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுகின்றன.

தமிழரின் வழிபாட்டிடங்கள் பெளத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

யுத்த காலத்தில் வடக்கு - கிழக்கில் நிலைகொண்டிருந்த சிறீலங்கா படையினர் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை அகற்றப்படவில்லை.

தமிழர்களின் காணிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அவர்கள் படை முகாம்களை அமைத்து தங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் படை முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தியாகி திலீபன் தமிழ் மக்களுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த எதிர்வரும் 26 ஆம் திகதி அவர் கூறியதைப் போன்று மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும். தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி புலம்
பெயர் தேசங்களிலும் சம நேரத்தில் இந்த மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும்.

திலீபனின் கோரிக்கைகள் போன்று ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும்.

1. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறைகளில் தடுத்து
வைக்கப்பட்டிருப்போர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2. வடக்கு - கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சிங்கள, முஸ்லிம் குடியேற்றங்களை உனடியாக நிறுத்தவேண்டும்.

3. வடக்கு - கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களிலும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிங்களப் படை முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

4. சிறீலங்கா படையினர் இழைத்த யுத்தக் குற்றங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க வேண்டும்.

5. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தமிழ் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்.

என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழர் தாயகத்தில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காலை முதல் மாலை வரை அடையாள உண்ணா
விரதப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

போராட்டத்தின் முடிவில் மேற்படி ஐந்து அம்சங்களையும் உள்ளடக்கிய பிரகடனம் ஒன்றை வெளியிட்டு, தமிழர்களின் அபிலாசைகளை பன்னாட்டுச் சமூகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

‘நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்’ இது திலீபனின் கோரிக்கை. அவரது கனவுகள் தீர்க்கதரிசனம் பெறவேண்டும்.

எதிர்வரும் 26 ஆம் திகதி நல்லூரில் நடத்தப்படும் போராட்டம் எந்த அரசியல் கலப்பும் அற்றதாக, திலீபன் நினைவேந்தல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இதில் அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ளவேண்டும்.

திலீபன் ஒரு தடவை உரையின்போது,  ‘எமது மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இம் மண்ணை ஆள அருகதையற்றவர்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.

ஆகவே, திலீபன் நினைவேந்தல் தினத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு பறைசாற்ற முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரசியல் கட்சிகளையும் கட்சித் தலைவர்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களே! தற்போது உங்கள் போராட்டங்கள் ஓய்ந்துவிட்டன. தமிழர் தேசம் கபளீகரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தாயகத்தில் தமிழ் மக்கள் வசித்தார்களா எனக் கேட்கும் நிலை எதிர்காலத்தில் உருவாகப் போகின்றது. எனவே, திலீபனின் நினைவேந்தல் தினத்தில் தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த அடையாளப் போராட்டத்தை ஒருங்கிணையுங்கள்.

‘எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது. மக்கள் அனைவரும் எழுச்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது’ எனக் கூறிய திலீபனின் கனவை நனவாக்குவதற்கு முன்வாருங்கள்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு