தியாகி திலீபனை நினைந்துருகுவோம்!

ஞாயிறு செப்டம்பர் 15, 2019

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நாள் இன்று.

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் நாள் தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

இன்று 32 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.காந்தி தேசத்திடம் நீதி கேட்டு காந்திய வழியில் தியாகி திலீபன் நடத்திய வேள்வி உலகில் எங்கும் காணமுடியாத அகிம்சைப் பேராட்டத்தின் உச்சம் எனலாம்.

எனினும் அந்த அகிம்சையின் உச்சத்தை நினைப்பது கூட நம்மண்ணில் ஆகாது என்ற நிலைமையே இருக்கிறது எனில் எங்களின் அடிமைத்தனம் நீங்கிவிட்டது என்று எப்படிக் கூற முடியும்.

எங்களுக்கென்று ஒரு நாடு, எங்களுக் கென்று ஒரு தேசம் இருக்குமாயின் தியாகி திலீபனின் அகிம்சைப் போராட்டம் எங்கள் பாடப் புத்தகத்தில் பதிவிடப்பட்டிருக்கும்.

ஆனால் தியாகம் நடந்தது தமிழினத்தில், உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்தவர் ஒரு தமிழ் மகன்.

எனவே அவரின் தியாகத்தை வருங்கால சந்ததி அறிவதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப் படாத இறுக்கமான நிலைமையே நம் மண்ணில் உள்ளது.

இந்த உண்மையை நம் அரசியல்வாதிகள் கூட உணர்ந்திலர். பதவி நிலையில் இருக்கக் கூடிய தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் வீரமும் தியாகமும் தேர்தல் பிரசாரங்களுக்கான வாசங்களேயன்றி வேறில்லை.

எங்கள் நிலத்தில் நடந்த ஒரு பெரும் மண் மீட்புப் போராட்டத்தை, அதில் நம் இளைஞர்கள் செய்த உயிர்த்தியாகத்தை, தியாகி திலீபன் மேற்கொண்ட உண்ணாநோன்பு யாகத்தை எங்கள் இளம் சந்ததி அறிய வேண்டும். அவை வரலாறாக எங்களோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் அரசியல்வாதிகளிடம் அறவே இல்லை.

அப்படியானதொரு எண்ணம் நம் அரசியல் தலைமைக்கு இருந்திருந்தால், அவர்கள் நிச்சயம் ஆட்சியாளர்களைக் காப்பாற்றுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் எம் இனத்துக்கு நீ தருவது என்ன என்று கேட்டிருப்பர்.

ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தும் தம் சுய இலாபங்களுக்காக ஆக்கப் பட்டதேயன்றி தமிழினத்துக்கானதாக ஆக்கப்படவில்லை.

ஓ! தியாகி திலீபன் உண்ணாநோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்த மண்ணில் இன்று நடப்பது என்ன என்பதை நினைக்கும்போது இதயம் கருகிக் கொள்கிறது.

அகிம்சை வழியிலும் ஆயுதப் போராட்ட வழியிலும் ஒரு பெரும் தியாகம் நடந்த மண் இது.

தமிழ் இனம் வாழ்வதற்காக, தமிழன் வாழ் வதற்காக தன்னுயிரை ஈகை செய்த மறவர் கள் வாழ்ந்த மண்ணில் இப்போது ஏதோவெல்லாம் நடக்கிறது.

இதை நாம் வெறுமனே பார்த்திருப்பது பாவச் செயலன்றே. தமிழினம் வாழ்வதற்காக பசி இருந்து தன் உயிர் துறந்த பார்த்தீபன்  செய்த தியாகத்தை நினைந்துருகுவோம்.

திலீபனின் தியாகத்தை உலகம் பாடமாய் படிக்க வகை செய்வோம்.

நன்றி-வலம்புரி