தமிழ் மக்கள் 2005 ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்து பிழை விட்டார்களாம்

வெள்ளி நவம்பர் 08, 2019

தமிழ் மக்கள் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்து பெரும் பிழை விட்டார்களாம் என சிங்கள மக்களின் சிநேகிதி கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். 

இன்று (08) மதியம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

அன்று விட்ட பிழையை நீங்கள் இன்றும் விடக்கூடாது. அதிகாரத்தில் இல்லாத சில கட்சிகள் தாம் அரசியல் செய்ய முடியாது என்பதற்காக தேர்தலை புறக்கணிக்க கோருகின்றனர். அதனை பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசக்கூடிய தலைமைகள் சொன்னாலாவது ஏற்றுக் கொள்ள முடியும். 

பொதுமக்களுக்கு காணிகளை கொடுத்தது, கைதிகளை விடுவித்தது, ஓமந்தை பொயின்ரை அகற்றியது, உயர்பாதுகாப்பு வலையத்தை விடுவித்தது, ஆலயங்களை விடுவித்தது போன்றவற்றை விரும்பாதவர்களே தேர்தலைப் புறக்கணிக்கக் கோருகின்றனர். 

இந்த அப்பாவி மக்கள் தான் 2005ம் ஆண்டு வாக்களிக்காததால் கொல்லப்பட்டார்கள். வடக்கில் இப்போது 90 ஆயிரம் பெண்கள் குடும்பத் தலைவனை இழந்து வாழுகின்றனர். பெற்றோரை இழந்த 6 ஆயிரம் சிறுவர்கள் இருக்கின்றனர். அதுவும் சிறுவர் இல்லங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் இருக்கின்றனர். 

பிள்ளைகளை இழந்த பெற்றோர் முதியோர் இல்லங்களில் இருக்கின்றனர். 30 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். வாக்களிப்பதன் மூலம் இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். – எனத் தெரிவித்தார்.