தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு

ஞாயிறு மார்ச் 29, 2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஐந்து பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இன்று மதியம் வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக இருந்தது. இந்நிலையில் மாலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘‘புதிதாக 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’’எனத் தெரிவித்தார்.

மேலும், ‘‘ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், அதில் சிலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’’ என்றும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது.

முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் ‘‘தமிழ்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 13,323 படுக்கைகள் உள்ளன. 3018 வென்டிலேட்டர்கள் உள்ளன. தற்போது 295 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1763 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1632 பேருக்கு உறுதி செய்யப்படவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.