தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செவ்வாய் மார்ச் 31, 2020

தமிழகத்தில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் 67 பேரை கொரோனா நோய் தாக்கியுள்ளது. அதாவது, நேற்று ஒரு நாள் மட்டும் 17 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 67-லிருந்து 74ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் விவரம் வருமாறு:-

திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபர் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் டெல்லி சென்று திரும்பிய விழுப்புரம், மதுரையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் தொடர்புடைய 28 வயது ஆணுக்கு திருவண்ணாமலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.