தமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம், சுமந்திரனிடம் கோரிக்கை

சனி மே 25, 2019

சிங்களவர்களுடன் இணைந்து தமிழர் வாழ்வைச் சூறையாடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் கீதன் இளையதம்பி தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றைத் தரவேற்றியுள்ளார். அது வருமாறு,

ரணிலோடு எவ்வளவுக்கு எவ்வளவு நெருங்குகிறீர்களோ அந்தளவுக்கு உங்களுக்கான பெறுமதி குறையும்.

இதனை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், உங்களுக்கு பூகோள அரசியல் இல்லை. உள்ளூர் அரசியலே விளங்கவில்லை என்று அர்த்தம்.

அன்று ரணிலை காப்பாற்ற - கம்பரலிய விளம்பர அனுசரணையை பெற்றுக்கொண்டதை தவிர வேறு ஒன்றும் உங்களால் செய்யமுடியவில்லை.

இப்போது ரிசாத்தை விசாரிக்கும் குழுவில் கூட்டமைப்பு சார்பாக சுமந்திரன்,

ஞானசார தேரரை விடுவித்தது சட்ட ரீதியாக தவறு என சட்டத்தரணிகள் குழுவில் சுமந்திரன்,

மணிவண்ணன் கொக்குவிலில் இருந்ததால், யாழ் மாநகர சபையில் இருக்கமுடியாது என சுமந்திரன்,

மாகாண முதல்வராக இருப்பதால், ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தியது தவறு என சுமந்திரன்,

கிளைமோர் வைத்தார்கள் என்ற பெயரில் கிளிநொச்சி இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து விசாரணை செய்யும் சுமந்திரன்,

இப்படியே உங்கள் சட்டத்திறமைகள், சிரிலங்காவின் யாப்பை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடைபெறுகிறுகிறது.

இந்த யாப்பே தவறு என்றுதான், 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். 50000 பேர் மாவீரர்கள் ஆனார்கள். நீங்களோ அந்த யாப்பை பாதுகாக்கப்போகிறோம் என்கிறீர்கள்.

இப்போது, வேண்டுமென்றே, மைத்திரியையும் மகிந்தவையும் ரணிலையும் என, அவர்களுடைய பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்து, எங்கள் பிரச்சனையை மறக்கடித்து விட்டீர்கள்.

அவசரகால சட்டத்தை நீடிக்கும் போதுகூட, சிறுபான்மை மக்களுக்குள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்தவேண்டிய நீங்கள், வேண்டுமென்றே அதில் முக்கியமானவர்கள் கலந்துகொள்ளவில்லை. அது வெற்றியடையுமா தோல்வியடையுமா என்பதை தாண்டி, தமிழர் தரப்பாக நியாயமாக எங்கள் கரிசனைகளை பதிவு செய்தீர்களா?

தயவுசெய்து, ரணிலோ மகிந்தவோ மைத்திரியோ எமக்கு முக்கியமில்லை. தமிழர் சார்பில் என்ன விடயத்தை அடையபோகிறோம் என தமிழர் நலன்சார்ந்து சிந்தியுங்கள்.

முஸ்லிம் தலைவர்கள் சொல்வதுபோல, சிங்கள கட்சிகள் அனைத்துமே, ஒரு பாடசாலை விளையாட்டு அணிகளில் உள்ள பச்சை நீல நிறங்கள் மட்டுமே.

இதனை புரிந்தும், சிங்கள தரப்பின் ஒரு தரப்புக்கு சேவகம் செய்வதற்காக, தமிழர் வாழ்வை சூறையாடாதீர்கள்.