தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம் திமுக!

திங்கள் செப்டம்பர் 09, 2019

“தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம் தி.மு.க.“ என்று கனிமொழி எம்.பி கூறினார்.

தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி நெல்லையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அங்கு கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா மறுமுறை ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாட்டையே ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று பெரிய முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு மொழி, ஒரு மதம் என்று எல்லாவற்றையும் அவர்கள் நினைக்கும் அடையாளத்துக்குள் கொண்டு வர பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். அதன் இன்னொரு முகம்தான் இந்த ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு என்ற ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதன்மூலம் மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்

இதனை தி.மு.க.வும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அவரது தவறான, நாகரிகமற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க. தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடக்கூடிய இயக்கம். அ.தி.மு.க. பலமுறை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மனப்பூர்வமாக கையில் எடுக்கவில்லை என்றாலும், அவர்களும் அதனை கையில் எடுத்து இருக்கிறார்கள். அவர்களின் சரித்திரம் அவர்களுக்கு தெரிந்து இருந்தால் இதுபோன்று பேசமாட்டார்கள். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.