தமிழர்களின் அமைதி கோத்தபாய போன்ற கடும்போக்குவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும்!

வெள்ளி டிசம்பர் 13, 2019

சிறீலங்காவின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. அமைதியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிய தமிழினம் இன்று நாதியற்று நிற்கின்ற நிலையில், கோத்தபாயவின் வருகை இவர்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.

ஆயுதப் போராட்டம் பெரும் இழப்புகளுடன் முடிவுக்கு வந்த பின்னர், இனிமேல் உள்ளக சுயாட்சியுடன் கூடிய சமஷ்டித் தீர்வு ஒன்றைப் பெற்று வாழலாம் என்ற எண்ணம் கொண்டிருந்த தமிழர் தரப்புக்கு கோத்தபாயவின் வருகை பேரிடியாக அமைந்திருக்கின்றது. தமிழர் தாயகத்தில் இனிமேல் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவே முடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழீழம் என்ற உயரிய தனித் தாயக இலட்சியத்தோடு நகர்ந்த தமிழர்களின் போராட்டம் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட நிலையில், 2009 ஆம் ஆண்டு ஆயுதங்களின் மெளனிப்போடு முடிவுக்கு வந்தது. கடந்த காலத்தில் ராஜபக்ச கம்பனி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனக்கூறி யுத்தம் செய்து,

மக்களை அழித்தொழித்த பின்னர் எல்லாவற்றையும் ஒரே குடைக்குள் கொண்டுவர முயற்சி எடுத்தது. தற்போது மீண்டும் ராஜபக்ச கம்பனியின் ஆட்சி தழைத்திருக்கின்றமையானது ஈழத் தமிழர் வாழ்வில் எழுச்சிக்கு பதிலாக வீழ்ச்சியையே கொண்டுவந்து தந்திருக்கின்றது.

அண்மையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் ஈழத்தமிழர் அரசியலின் திசை மாறியிருக்கின்றது. விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக் கூட புஷ்வாணமாகியிருக்கின்றது.

அந்த அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத நிலையிலும் அதைக்கூட நிறைவேற்றுவதற்கு கோத்தபாய ராஜபக்ச தரப்பு தயாராக இல்லை.

மேலும், அண்மையில் கோத்தபாய ராஜபக்சவின் இந்தியப் பயணம் தமிழ் மக்களுக்கு பல விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்கள் விடயத்தில் கோத்தபாய என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பதை அவரது இந்தியப் பயணம் வெளிச்சம் போட்டுக் காட்டியது. கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவைப் போன்று தமிழர்களை ஒடுக்கும் இராஜதந்திர அரசியல் நகர்வில் கைதேர்ந்தவர் என்பதையும் அது வெளிக்காட்டியது.

கோத்தபாயவிற்கு முன்னால், தமிழ் மக்களில் தமக்கு அக்கறை இருப்பதைப் போல வெளிப்படுத்திக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக் தீர்வு காண்பதற்கான முனைப்புக்களில் ஈடுபடுங்கள் என கோத்தபாயவை வலியுறுத்தியிருந்தார். இலங்கை - இந்திய ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு சரத்தை நடைமுறைப்படுத்துமாறும் மோடி கோத்தபாயவைக் கேட்டிருந்தார்.

ஆனால், இந்தியப் பிரதமரின் இந்தக் கோரிக்கையை இந்தியாவில் வைத்தே மறுத்திருக்கின்றார் கோத்தபாய. அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தில் கூறப்பட்ட பல விடயங்கள் ஏற்கனவே நாட்டில் நடைமுறையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய கோத்தபாய, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என இறுமாப்போடு கூறினார்.

மேற்படி 13 ஆவது திருத்தம் என்பது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பதை அது கொண்டுவரப்பட்ட 1987 ஆம் ஆண்டு பல தரப்புக்களும் தெரிவித்தன. தமிழ் மக்களின் தேர்தல் அரசியல் அணியாக அப்போதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதை நிராகரித்திருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழத் தேசியத் தலைவர், 13 ஆவது திருத்தத்தை உடனடியாகவே நிராகரித்திருந்தார். முழுமை பெறாத சரத்து ஒன்றை தீர்வு என்ற பெயரில் திணிக்க முற்பட்ட இந்திய-இலங்கை கூட்டுச் சதி முயற்சியை உணர்ந்துகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மதிநுட்பம் பின்னாளில் விதந்துரைக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

13 இல் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயம் ஒன்று உள்ளது எனில், அது வடக்கு - கிழக்கு இணைப்பு மட்டுமே ஆகும். இலங்கைத் தீவை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்து, அதில் வடக்கு - கிழக்கு மாகாணத்தை தனியான ஓர் அலகாக இணைத்து அது தமிழர்களுக்குரிய தனி அலகு என அடையாளப்
படுத்தப்பட்டது.

ஆனால், இணைந்த இந்தப் பிராந்தியத்திற்கான அதிகார வரையறுப்பு தொடர்பாக 13 ஆவது திருத்தத்தில் எந்தவித கருத்தும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு காணி, காவல்துறை அதிகாரத்துடன் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு ஒன்றே தமிழர்களுக்கு தேவை என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு 13 ஆவது சரத்து சாதகமாக அமையவில்லை. ஏதுமற்ற அந்த வெற்றுக் காதித நகலைக்கூட நடைமுறைப்படுத்த முடியாது எனக் கூறிய கோத்தபாய ராஜபக்ச, தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவார் என நம்பமுடியாது.

தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையே ஏற்றுக்கொள்ளாத கோத்தபாயவிடம் இருந்து தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் காலத்தில் அவரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில்கூட தமிழ் மக்கள் தொடர்பாக எதையுமே அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

கோத்தபாயவுடன் நெருங்கி இருப்பவர்கள், தமிழர் மக்களுக்கு  பிரச்சினையே இல்லை எனக்கூறும் தரப்பு எப்படித் தீர்வை முன்வைக்கும்?

கோத்தபாயவின் வரவுக்கு பின்னர் தமிழர் தாயகத்தில் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளன. திடீர் திடீரென சோதனைகள் இடம்பெறுகின்றன. கடந்த காலங்களில் தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர்களை அச்சமூட்டிய ‘பீல்ட் பைக் குறூப்’ களின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் போக்குவரத்துச் செய்யும் வீதிகளில் முன்னர் இருந்து பின்னர் அகற்றப்பட்ட வீதித் தடைகள் மீண்டும் முளைத்துள்ளன. அத்தோடு கைது செய்யும் படலமும் ஆரம்பமாகிவிட்டது.

கோத்தபாய ராஜபக்சவைப் படுகொலை செய்ய முயற்சித்தார்கள் எனத் கூறி வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உட்பட 05 பேர் கட்டுநாயக்கா பகுதியில் வைத்து அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது றிப்கான், கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் மதன், விசுவமடு தர்மபுரத்தைச் சேர்ந்த வேலு கோணேஸ்வரம், விசுவமடு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்னம் நகுலேஸ்வரன், மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஆரியராஜன் கமலராஜா ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மதன் எனும் சந்தேகநபருடைய சகோதரிகள் இருவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனவும் அவர்களில் ஒருவருக்கு இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

கைது செய்யப்பட்ட நபர்களில் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பிரதான நபர் எனக் கூறப்படும் முஸ்லிம் நபர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.  

உண்மையிலேயே இது கைது என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகம் என தெரியவருகின்றது. தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு நெருக்கடிகளை இறுக்குவதற்கும் தமிழ் - முஸ்லிம் மக்களையும் மலையகத் தமிழர்களையும் நெருக்கடிகளுக்குள் தள்ளுவதற்கும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட நடவடிக்கை எனவும் தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படவில்லை. தமது மிக விசுவாசமான இருவருக்கு குறிப்பாக, கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்களைக் கொன்று குவிப்பதற்கு கோத்தபாய ராஜபக்சவுக்கு உதவிய ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகிய இருவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் இருவேறு விடங்கள் தங்கியிருக்கின்றன, ஒன்று கடந்த காலத்தில் தமது அராஜகங்களுக்கு உதவியமைக்கு நன்றிக்கடன் செலுத்துவது, மற்றையது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்துவது. ஆனால், முஸ்லிம்களை புறக்கணித்ததன் மூலம் சிங்களத் தரப்பிற்கு தமது முஸ்லிம் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கோத்தபாய.

இவற்றின் பின்னணியிலேயே மேற்படி கைது நாடகத்தையும் நோக்கவேண்டும். கோத்தபாயவைக் கொலை செய்வதற்கு முயன்றார் எனக் கூறப்பட்டு ஏற்கனவே சிவரூபன் என்ற வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது. கைது என்ற நாடகத்தின் பின்னர் தமிழ் - முஸ்லிம் பிரதேசங்களில் இராணுவ சோதனைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர் தாயகத்தை தொடர்ந்தும் பதற்றத்தில் வைத்திருப்பதன் மூலம் தமிழர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருந்து அவர்களின் விடுதலைக் கோரிக்கையை அடக்குவதே சிங்களத் தரப்பு கையாண்டுவரும் உத்தி. அந்த உத்தியை கோத்தபாய ராஜபக்ச கனகச்சிதமாகவே கடைப்பிடிப்பவர்.தற்போதும் கடைப்பிடிக்கின்றார்.

மாவீரர் தினத்திற்கு சில தினங்களின் பின்னர் தாம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் திகதியை நிர்ணயித்திருந்த கோத்தபாயவிற்கு எதிராக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் எழக்கூடிய போராட்டங்களைத் தவிர்ப்பதற்கும் அடுத்துவரும் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்போது அங்கு இடம்பெறக்கூடிய எதிர்ப்பு அலைகளைக் குறைப்பதற்கும் கோத்தபாய கையாண்ட மிகச் சிறந்த இராஜதந்திரமே மாவீரர் தினத்திற்கானஅனுமதி வழங்கல் ஆகும்.

கோத்தபாயவின் நகர்வுகளுக்கு எதிராக - அல்லது கோத்தபாவின் தமிழின விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தி அதில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக் கோரிக்கையை முன்கொண்டு செல்வதற்கு - தமிழர் தரப்பு என்ன உத்தியைக் கையாளப்போகின்றது என்பதை இதுவரை தமிழ்த் தலைமைகள் வெளிப்படுத்தவில்லை.

குறிப்பாக, கோத்தபாயவின் அராஜகத்தை எதிர்கொள்வதற்கு இன்னும் தமிழர் தரப்பு தயாராகவில்லை என்பதே உண்மையானது.

தமிழர்களின் இந்த அமைதிப்போக்கு சிங்களத் தரப்பை, அதுவும் கோத்தபாய போன்ற கடும்போக்குவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியத்தின் வழி பயணிக்கும் கட்சிகளும், தமிழ்த் தேசியத்தின் வழி பயணிக்கும் அமைப்புக்களும் கோத்தபாய தலைமையிலான சிங்கள அராஜகத்தை எதிர்ப்பதற்கு விரைவாக ஒன்றிணைந்து தயாராகவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு