தமிழர்களின் உணவு வட இந்தியர்களால் சுரண்டப்படும்!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்தியில் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. நாடு முழுமைக்கும் பொது விநியோகத்தை இணைக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மிகப்பெரிய சுரண்டலையும், அபகரிப்பையும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேராபத்து இருக்கிறது.

‘ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு! ஒரே பொதுவிநியோகம்! ஒரே தீர்ப்பாயம்! ஒரே குடும்ப அட்டை’ என யாவற்றையும் ஒற்றைமுகப்படுத்தும் வேலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இறங்கியிருக்கிறது. இவையாவும் இந்நாட்டின் மேன்மைமிக்க கோட்பாடானக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறையாண்மையையும் தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.
 

இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் தமிழகமாகும். பொதுவிநியோகப் பகிர்வைச் செயற்படுத்த தமிழகம் முழுவதும் இருக்கிற கட்டமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை. உணவுப்பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டுவர முற்பட்டபோது தமிழகம் அதனை எதிர்த்ததற்குக் காரணமும் இதுவேயாகும். பொது விநியோகப் பகிர்வின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் அது தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வையே முற்றிலும் சீர்குலைத்துவிடும்.


தமிழகத்தை வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே இத்திட்டம் முழுக்க முழுக்கப் பயன்படும். இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர் தாய்நிலம் வடஇந்தியர்களின் படையெடுப்பால் பெரிய அபாயத்தைச் சந்திக்கும்; அயலவர்களின் ஆக்கிரமிப்பால் திக்கித் திணறும். சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் போல அல்லாடுகிற நிலை உருவாகும். முழுக்க முழுக்கத் தமிழர்களின் உரிமைப்பறிப்புக்கும், உணவுச்சுரண்டலுக்குமே வழிவகுக்கும்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை வரியாக அள்ளி எடுத்துச் செல்கிற மத்திய அரசு, அதனைக் கிள்ளித் தரக்கூட முனைவதில்லை. பேரிடர் காலங்களில்கூட தமிழகம் கேட்கிற நிதியைத் தராது வஞ்சித்தே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் உணவுப் பகிர்வையும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அபகரித்துக் கொள்ள வழிவகை செய்வது மிகப்பெரிய மோசடித்தனம். வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது எனும் முழக்கத்தை முன்வைத்து தன்னாட்சி உரிமைகேட்ட பேரறிஞர் அண்ணாவின் பேரில் இயங்கும் அதிமுக இத்திட்டத்தில் இணைந்தால் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும்.

இத்திட்டத்தில் இருக்கிற பேராபத்தினை உணர்ந்து, இந்த திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், எதன்பொருட்டும் அத்திட்டத்தில் இணையக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.