தஞ்சம் வழங்குமா நியூசிலாந்து?

திங்கள் டிசம்பர் 16, 2019

பப்பு நியூ கினியா தீவில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து இலக்கிய விழா ஒன்றில் பங்கெடுப்பதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள குர்து  அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி, ஒரு மாத விசா காலாவதியாவதற்குள் நியூசிலாந்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையை கடுமையாக விமர்சித்த வந்த அவர், நியூசிலாந்தில் தஞ்சம் கோரக்கூடும் எனச் சொல்லப்பட்ட நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

“அவர் நியூசிலாந்தில் தஞ்சம் கோருகிறார் என்றால் அது சட்டப்பூர்வமாக பரிசீலிக்கப்படும். அந்த பரிசீலணையில் அமைச்சர்களின் தலையீடு இருக்காது,” எனத் தெரிவித்துள்ளார் நியூசிலாந்து குடியேற்றத்துறையின் துணைத் தலைமை நிர்வாகி கிர்க் பேட்ச்செல்.  

பூச்சானி நியூசிலாந்தில் தற்காலிகமாகவே தங்கும் நோக்கம் கொண்டிருந்தார் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ததன் அடிப்படையிலேயே அவருக்கு நியூசிலாந்தில் ஒரு மாத விசா வழங்கப்பட்டதாக கூறுகிறார் குடியேற்றத்துறை நிர்வாகி. 

இந்த நிலையில், “நான் ஒருபோதும் அங்கு (பப்பு நியூ கினியாவுக்கு) செல்ல மாட்டேன்,” எனக் கூறியிருக்கிறார் குர்து அகதியான பூச்சானி. 

ஐ.நா. அகதிகள் சாசனத்தின் அடிப்படையில், அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெஹ்ரூஸ் பூச்சானி ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். 

கடந்த ஜூலை 2013ல் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த பூச்சானி, மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளார். தன்னுடைய நீண்ட தடுப்பு முகாம் அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற புத்தகமாக அவர் எழுதியிருக்கிறார். 

இந்த நூலின் மூலம் பரவலாக அறியப்பட்ட பூச்சானியின நியூசிலாந்து பயணத்திற்கு ஆமென்ஸ்டி இண்டர்நேஷன்ல் அமைப்பு ஆதரவளித்துள்ளது. தற்போது, நியூசிலாந்தில் உள்ள பெஹ்ரூஸ் பூச்சானிக்கு அந்நாட்டில் தஞ்சம் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.