தங்கத்தை கடத்தி வந்த பெண்களை கடத்தி சென்ற கும்பல்!

புதன் நவம்பர் 06, 2019

சிறிலங்காவில்  இருந்து சென்னைக்கு வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்த பெண்களை பரிசோதனையின் போது வழிமறித்த கும்பல் கடத்தி சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறிலங்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பாத்திமா, திரேசா என்ற 2 பெண்கள் வந்தனர்.அவர்களது வயிறு பெரிதாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் சுங்கதுறை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது 2 பேரின் வயிற்றிலும் சிறிய மாத்திரை வடிவிலான தங்க கட்டிகள் இருந்தன.

இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து தங்கத்தை வெளியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக ஆஸ்பத்திரிக்கு 2 சுங்க அதிகாரிகள் பெண்களை அழைத்துச் சென்றனர். இதில் பெண் அதிகாரி ஒருவரும் இருந்தார்.

ஆஸ்பத்திரி அருகில் வைத்து 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழி மறித்தது. காரில் இருந்து இறங்கியவர்கள் சுங்க அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டி, பாத்திமாவையும், திரேசாவையும் கடத்திச் சென்றனர்.

அந்த காரை சுங்க அதிகாரிகள் விரட்டிச் சென்றனர். ஆனால் கடத்தல் கும்பல் 2 பெண்களுடனும் காரில் தப்பி விட்டது. அயன் சினிமா படத்தில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல் துறை  கடத்தல் கும்பலை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கடத்தப்பட்ட 2 பெண்களும் இன்று காலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். சுங்க அதிகாரிகளிடம் சென்று, காரில் கடத்தியவர்கள் இனிமா கொடுத்து தங்களது வயிற்றில் இருந்த தங்கத்தை வெளியில் எடுத்து விட்டதாக தெரிவித்தனர்.

2 பெண்களிடமும் சென்னையில் உள்ள சுங்க அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

யாருக்காக தங்கத்தை கடத்தினீர்கள்? என்பது பற்றி இருவரிடமும் சுங்க துறையினர் விசாரித்து வருகிறார்கள். காவல் துறையால்  விசாரணை  முடுக்கி விடப்பட்டுள்ளது.