தட்டாம் பூச்சி மூளைக்கு ராணுவ அங்கீகாரம்!

செவ்வாய் ஓகஸ்ட் 06, 2019

தம்மாத்துண்டு தான் இருந்தாலும், அந்த அளவு மூளையை வைத்து, எவ்வளவு விரைவாக இப்படியும் அப்படியும் பறக்கிறது தட்டாம் பூச்சி! அந்த மூளைக்குள் நியூரான் செல்கள் இயங்கி,எப்படி முடிவெடுக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கின்றனர்.

எதற்கு?கணினியில் அதே போன்ற அல்காரிதம் என்ற நிரல்களை எழுதி, அவை பாய்ந்து வரும் ஏவுகணைகளை,வானிலேயே தடுத்து தாக்கும் எதிர்ப்பு ஏவுகணைகளை திறம்பட இயக்க உதவுமா என்பதை விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

பூச்சியினங்களில், 32.5 கோடி ஆண்டுகளைக் கடந்தும் அதிக பரிணாம மாற்றங்களை அடையாத தட்டாம் பூச்சி,இரைகளைக் குறிவைப்பதில்,95 சதவீத வெற்றி காணக்கூடியது.

எனவே, அதன் மூளையின் அடிப்படையில் நிரல் எழுதி, அதை எதிர் ஏவுகணைக்கு தந்தால் அதன் துல்லியம் பல மடங்கு கூடும் என்கின்றனர்,அமெரிக்காவிலுள்ள சாண்டியா தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானிகள்.

இந்த ஆராய்ச்சி ராணுவத்திற்கு மட்டுமல்ல,தானோட்டி வாகனங்கள், புதிய மருந்துகள் கண்டுபிடித்தல், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் வேகமாக முடிவெடுக்க, இந்த நிரல்கள் பயன்படும்.