‘ஊசியை வைத்தே அம்மாவின் சடலத்தை கண்டேன்’

வெள்ளி மே 24, 2019

ஆலயத்துக்கு சென்ற எனது அம்மாவும் இறந்துவிட்டாரென மாமா சொன்னார். அம்மா​ சென்றிருந்த

ஆ​லையத்து ஓடோடிச் சென்றேன். ஆனால், காவலில் நின்றிருந்தவர்கள், உள்ளே செல்வதற்கு என்னை அனுமதிக்கவில்லை என சாட்சியமளித்த ஒரு தாயின் மகன், அம்மாவின் கொண்டை ஊசி மற்றும் வௌ்ளை நிறத்திலான தோடு ஆகியவற்றை வைத்தே, அம்மாவின் சடலத்தை அடையாளம் கண்டேன் என, கண்ணீர் மல்க, சாட்சியளமளித்தார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரண விசாரணை, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, நேற்று (23) இடம்பெற்றது. விசாரணையை, பொலிஸார் நெறிப்படுத்தினார். நேற்றைய மரண விசாரணையின் போது, மூன்று பேர் சாட்சியமளித்தனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த வேலாயுதம் வேலுசாமி சரோஜினி மற்றும் ஹோய் பெனடிக் ஜயராஜ் ஆகியோரின் மரண விசாரணைகளே நேற்று இடம்பெற்றன.

சரோஜினியின் மகன்

வேலாயுதம் வேலுசாமி சரோஜினியின் மரண விசாரணையில் அவருடைய மகனான மொஹமட் ஜபாய் மொஹமட் சஹர் சாட்சியமளிக்கையிலேயே தன்னுடைய தாய் அணிந்துசென்றிருந்த கொண்டை ஊசி, வௌ்ளை நிறத்திலான தோடு ஆகியவற்றை வைத்தே தாயின் சடலத்தை அடையாளம் கண்டதாக தெரிவித்தார்.

“எனது பெயர் மொஹமட் ஜபாய் மொஹமட் சஹர். வயது 30, நான் கூலி வேலை செய்து வருகின்றேன். கொட்டாஞ்சானையை வசிப்பிடமாகக் கொண்டுள்ளேன்” என்றார்.

குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற​ தினத்தன்று, நான் வேலையில் இருந்தேன். நான் வேலைக்கு போக முன்னர் எனது அம்மா, “தான் பள்ளிக்கு போக போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டார். இதற்கு நான், “எனக்கு வேலை இருக்கிறது. நீங்கள் போய் வாருங்கள். என் பிறகு வருகிறேன்” என்றேன்.

அதற்கு அம்மா, “நான் போகிறேன். நீ பிறகு வா” எனக் கூறிவிட்டு அவர் பள்ளிக்குச் சென்று விட்டார்.

நானும் அம்மாவை வழியனுப்பிவைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டேன் என்றார்.

இதையடுத்து, கேள்வியெழுப்பிள நீதவான், குண்டு வெடிப்பு சம்பவத்தை நீங்கள் எவ்வாறு அறிந்தீர்கள் என வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர், எனது மாமாவின் மூலம் சம்பவத்தை அறிந்து கொண்டேன் என்றார்.

இதையடுத்து, கேள்வியெழுப்பிய நீதவான், சம்பத்தை அறிந்ததும், நீங்கள் சம்பவ இடத்துக்கு (தேவாலயத்துக்கு) சென்றீர்களா என வினவினார்.

இதற்கு பதிலளித்த அவர், நான் அங்கு போகவில்லை. என்னை அங்கு போவதற்கு அனுமதியளிக்கவில்லையெனத் தெரிவித்தார்.

இறந்தது உங்கள் அம்மா என்பதை எவ்வாறு உறுதி செய்தீர்கள் என நீதவான் வினவியதற்கு பதிலளித்த அவர், “எனது அம்மா சம்பவம் நடந்த மாதத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்தியாவில் இருந்து அலங்கைக்கு வந்த அவர், சிலர் பொருள்னை கொள்வனவு செய்திருந்தார். அதில் கொண்டை ஊசியும் உள்ளடங்கியிருந்தது.

“இந்தகொண்டை ஊசியை​, வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற தினத்தில் தேவாலயத்துக்கு அணிந்து சென்றிருந்தார்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதை கேள்வியுற்ற என்னை அவ்விடத்துக்கு செல்ல என்னுடன் இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர், வைத்தியசாலைகளில் உள்ள பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறைக்குச் சென்றேன்.

“அங்கு எனது அம்மாவின் சடலம் காட்டப்பட்டது. அதன்போது, உடற்பாகங்கள் அனைத்தும் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாதவாறு இருந்து.

“பின்னர், எனது அம்மாவின் தலை மயிரில் செருகியிருந்த கொண்டை ஊசியை வைத்து, இது தான் எனது அம்மாவின் சடலம் என அடையாளம் கண்டுகொண்டேன். அந்த கொண்டை ஊசி நெழிந்த நிலையில் காணப்பட்டது.

அத்துடன், எனது அம்மா வழமையாக அணியும் வௌ்ளைத் தோடொன்று உள்ளது. அந்தத் தோடையே, அன்றையதினம் அணிந்திருந்தார்.

அந்தத் தோட்டையும், கொண்டை ஊசியையும் வைத்தே, எனது அம்மாவின் சடலத்தை அடையாளம் காட்டினேன்” என்றார்.

இதையடுத்து, கேள்வியெழுப்பிய நீதவான், சடலத்தை அடையாளம் காட்டியவுடன், மரபணு பரிசோதனைக்கு குருதி வழங்கினீர்களா?

இதற்கு பதிலளித்த அவர், “ஆம், வழங்கிய தினம் சரியாக ஞாபகம் இல்லை. பத்தரமுல்லைக்குச் சென்றே மரபணு பரிசோதனைக்கான எனது குருதியை கொடுத்தேன். எனது கட்டை விரலில் இருந்து இரத்தம் பெறப்பட்டது” என்றார்.

இவ்வாறு பெறப்பட்ட இரத்தம், உங்களுடைய அம்மாவின் மரபணு பரிசோதனை அறிக்கையுடன் ஒத்துபோனதா என நீதவான் வினவியதற்கு, அவர், “ஆம்” என பதிலளித்தார்.

மீண்டும் இதை உறுதிப் படுத்துவதற்காக கேள்வியெழுப்பிய நீதவான், “மரபணு பரிசோதனை அறிக்கையை வைத்துதான், உங்களுடைய அம்மாவின் மரணத்தை உறுதி செய்கிறீர்களா?” என வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர், ஆம். அத்துடன், எனது அம்மா அன்றைய தினம் அணிந்திருந்த கொண்டை ஊசி, தோடு ஆகியவற்றையும் வைத்தே, அது எனது அம்மாவின் சடலம் என உறுதி செய்தேன் என மன்றுரைத்தார்.

“உங்களுடைய அம்மாவின் சடத்தை பெறுப்பேற்றீர்களா?” என நீதவான் வினவியதற்கு அவர், “ஆம்” என பதிலளித்தார்.

இறுதியாக, வேறு விடயங்கள் எவற்றையாவது மன்றில் முன்வைக்க விரும்புகிறீர்களா என வினவியதற்கு, அவர், “இல்லை” எனத் தெரிவித்து, தனது சாட்சியப் பதிவை நிறைவுசெய்தார்.

சரோஜினியின் அண்ணன் வேலுசாமி ராஜரட்ணம்:

இதையடுத்து, சரோஜினியின் மரண விசாரணை தொடர்பில் சாட்சியமளித்த அவரது அண்ணன் வேலுசாமி ராஜரட்ணம்,

எனது பெயர் வேலுசாமி ராஜரட்ணம். வயது 50. நான் ஒரு வியாபாரி. நான் கொட்டாஞ்சேனை – பிக்கரிங்ஸ் வீதியில் வசித்துவருகிறேன். உயிரிழந்தவர், எனது சகோதரியாவர்.

சம்பவம் நடந்த தினத்தில் நான் என்னுடைய வீட்டில் இருந்தேன். அப்போது கொச்சிகடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதை நான் அறிந்திக்கவில்லை. வெடிப்பு சம்பவம் இடம்பெற்று சில நிமிடங்களில் எனது அக்கா அலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி, கொச்சிகடை தேவாலயத்தில் குண்டு வெடித்ததை கூறினார்.

அத்துடன், தேவாலயத்துக்கு தங்கையும் சென்றிருந்ததாக, அக்கா கூறினார்.

“இதையடுத்து, பதறிக்கொண்டு நான் தேவாலயத்துக்குச் சென்ற போது, அங்கு அனைத்தும் நடந்தேறி முடிந்துவிட்டது. கொச்சிக்கடை தேவாலயத்தை சூழ பொலிஸாரும் இராணுவத்தினரும் சூழ்ந்திருந்தார். இதையடுத்து, நான் தேவாலயத்தை நெருங்கும் போது, அங்கிருந்த பொலிஸாரும் இராணுவத்தினரும், என்னை தேவாலயத்துக்குள் செல்லவோ, தேவாலயத்தை நெருங்கவோ அனுமதிக்கவில்லை.

இருந்தும், அங்கிருந்த பொலிஸாரிடம், ”எனது தங்கை தேவாலயத்துக்கு வந்திருந்தார். அவரது நிலைமை என்னவென்று பார்க்க வேண்டும்” என கேட்டேன்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த பொலிஸார், “சடலங்கள் அனைத்தும் கொழும்பு வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு சென்று உங்களது தங்கை உயிரிழந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திகொள்ளுங்கள்” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருமகனுடன் (உயிரிழந்தவரின் மகன்) கொழும்பு வைத்தியசாலைக்குச் சென்றேன் என்றார்.

அதைத்தொடர்ந்து கேள்வியெழுப்பிய பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை தேடினீர்களா, அதன் பின்னர் அடையாளம் கண்டீர்களா என வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், ஆம். கொச்சிக்கடை தேவாலயத்துக் வௌியே கண நேரம் நின்றேன். பின்னர் அஙிகிருந்த பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய, நானும் எனது மருமகனும் கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறைக்குச் சென்று பார்த்தோம்.

பிரேத அறையில் வைத்து எனது தங்கையின் சடலத்தை என்னால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை, அந்த அளவுக்கு எனது தங்கையின் உடல் சிதைவடைந்து இருந்தது எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் எவ்வாறு அடையாளம் காட்டினீர்கள் என நீதவான் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த அவர்,

இறுதி வரையில் என்னால் சடலத்தை அடையாளம் காணமுடியவில்லை. இறுதியில், அவர் வழமையாக கழுத்தில் அணியும் சங்கிலி, கொண்டை ஊசி, வௌ்ளை நிறத்தோடு என்பவற்றை வைத்தே, அது எனது தங்கையின் சடலம் என அடையாளம் கண்டேன்.

அத்துடன், எனது அக்கா வழங்கிய தகவலுக்கமைய, அன்றைய தினம் எனது தங்கை ரோஸ் நிற ஆடையை அணிந்து சென்றதாகத் தெரிவித்தார்.

அந்த ஆடையின் சிறிய துண்டொன்றும் சடத்தில் ஒட்டியிருந்தது. அதை வைத்துமே, எனது தங்கையின் சடலம் என அடையாளம் கண்டேன்.

இருப்பினும், அது எனது தங்கையின் சடலம் தான் என உறுதியாக அடையாளம் காட்டமுடியாத நிலையில் இருந்தேன் என்றார்.

இதையடுத்து, கேள்வியெழுப்பிய அவர், நீங்கள் மரபண பரிசோதனைக்கு குருதி வழங்கினீர்களா?

அதற்கு பதிலளித்த அவர், என்னிடம் குருதி பெறப்படவில்லை. ஆனால், எனது மருமகனிடம் குருதி பெறப்பட்டது. மரபணு பரிசோதனை வந்ததன் பின்னரே, எதையும் கூற முடியும் என, அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேத அறைக்கு யார் முதலில் சென்றது? அங்கு யார், யார் இருந்தார்கள் என நீதவான் வினவியதற்கு பதிலளித்த அவர், நான் தான் முதலில் பிரேத அறைக்குள் சென்றேன். அங்கு மரண விசாரணை அதிகாரிகள் இருந்தனர். நான் பாரத்த பின்னர் எனது மருமகன் சென்று சடலத்தை பார்வையிட்டார் என்றார்.

மரபணு பரிசோதனை அறிக்கை உங்களுக்கு வழங்கப்பட்டதா என வினவியதற்கு அவர் இல்லை என பதிலளித்தார்.

இதையடுத்து, மரபணு பரிசோதனை அறிக்கை படி, உங்களது தங்கையின் மரபணுவுக்கும் மருமகனின் மரபணுவுக்கும் ஒத்துபோனதா என நீதவான் வினவியதற்கு, அவர் ஆம் என பதிலளித்தார்.

இறுதியாக, உங்களது தங்கை உயிரிழந்தமைக்கான காரணம் எதுவென கருதுகிறீர்கள் என வினவியதற்கு, அவர், “குண்டுவெடிப்பு சம்பவமே காரணமாகும்” என தெரிவித்து, தனது சாட்சியத்தை நிறைவு செய்தார்.

சாட்சியங்களை ஆராய்ந்த நிதவான், வேலாயுதம் வேலாயுதசாமி சரோஜினி குண்டுவெடிப்பிலேயே உயிரிழந்தார் என நிருபிக்கப்படுவதை அடுத்து, அவரது மரண சான்றிதழை அவரது மகனுக்கு வழங்குமாறு உத்தரவிட்டார்.

பெனடிக் ஜோய் ஜெயராஜின் மரண விசாரணை

அடுத்தாதாக கொச்சிகடை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெனடிக் ஜோய் ஜெயராஜின் மரண விசாரணை எடுத்துகொள்ளப்பட்டது.

இதற்கு சாட்சியாளராக, அவரது மைத்துனன் சபரிமுத்து செபஸ்டியன் ஆஜரானார்.

இதன்போது, “உயிரிழந்த பெனடிக் ஜோய் ஜெயராஜின் உடற்பாகங்கள், விசாரணைக்கென இன்னும் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அது இனி விசாரணைக்கு தேவைப்படாது. சாட்சிகளின் வாக்குமூலத்துக்கு அமைய, அவர் குண்டு வெடிப்பில்தான் உயிரிழந்துள்ளார் என நிரூபனமாகிறது” என நீதவான் தெரிவித்தார்.

ஆகவே, உயிரிழந்தவரின் மரண சான்றிதழை, உயிரிழந்தவரின் வீட்டு முகவரிக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு நீதவான் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், உயிரிழந்தவரின் உடற்பாகங்களை பெறுவதற்கான கடிதம் நீதிமன்றத்தின் ஊடாக சட்டவைத்திய அதிகாரிக்கு அனுப்பப்டும். இதற்கு தேவையான மேலதிக உதவிகளை பொலிஸாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமென, சாட்டியாளர் சபரிமுத்து செபஸ்டியனுக்கு நீதவான் தெரிவித்தார்.

இதையடுத்து, அவரது உடற்பாகங்களை பெறுப்பேற்க நீங்கள் உடன்படுகிறீர்களா என வினவியதற்கு, சாட்சியாளர், “ஆம்” என மன்றுரைத்தார்.

இதையடுத்து, மேற்படி வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.