உலகின் கடைசி 2 வெள்ளை பெண் காண்டாமிருகங்கள்!

புதன் ஓகஸ்ட் 28, 2019

உலகில் சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகைகள் உள்ளது.

ஆப்பிரிக்காவில் வேட்டையாடுதல் காரணமாக விலங்குகளின் எண்ணிக்கையானது நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் காண்டாமிருகங்கள் அதன் கொம்புக்காக வேட்டையாடப்படும் சூழ்நிலை தொடரும் நிலையில், ஆப்பிரிக்காவிலும் அவை வேட்டையாடப்படுகிறது.

காண்டாமிருகங்களுக்கு இயற்கையாக பெரிய எதிரிகள் கிடையாது. அவை வயது உயர்வு அல்லது உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழக்கும். இவைகளுக்கு முக்கிய எதிரி மனிதன் மட்டும்தான்.

ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு அடுத்தப்படியாக காண்டாமிருகங்களே அதிகமாக வேட்டைக்காரர்களின் இலக்குக்கு ஆளாகிறது.  இதில் ஒல் பெஜெட்டா வனவிலங்குகள் காப்பம் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு மிகவும் கவனம் பெற்று இருந்தது.

உலகில் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையே மொத்தம் மூன்றுதான் என்று கடந்த ஆண்டு இருந்தது. அதில் இரண்டு பெண்கள், ஒரே ஒரு ஆண் காண்டாமிருகம்தான். ஒரு வேளை வேட்டைக்காரர்களின் துப்பாக்கி இந்த சூடானையும் சுட்டு விட்டால் இந்த பூமியில் இனி இந்த இனமே இருக்காது என்ற நிலையில்

வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களுக்கு கென்யா அரசு பாதுகாப்பை அதிகரித்து பராமரித்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுடான் என்ற ஆண் வெள்ளை காண்டாமிருகம் தன்னுடைய 45 வயதில் கென்யாவில் மரணமடைந்தது.

ஆண் காண்டாமிருகம் இல்லாததால் இனப்பெருக்கம் இல்லாத நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவியது. இந்த இனம் அடியோடு அழிந்துவிடும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நைரோபியின் வடக்குப் பகுதியில் சுடானுடன் வசித்து வந்த இரண்டு வெள்ளை பெண் காண்டா மிருங்கங்ளான நஜின், பட்டுவிலிருந்து 10 முட்டைகளை எடுத்து அதை செயற்கையான முறையில் கருத்தரிக்க முயன்றதில் 7 முட்டைகள் வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக பெர்லினில் இயங்கும் வனவிலங்கு ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஆண் வெள்ளை காண்டாமிருகத்திடம் இருந்து பெறப்பட்ட விந்தணுக்களை  கொண்டு கருவுறல் நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.