உலகின் பெரிய சூரிய மின் பூங்கா!

வெள்ளி ஜூலை 12, 2019

அபுதாபிக்கும் துபாயிற்கும் கடும் போட்டி.கச்சா எண்ணெய் உற்பத்தியில் அல்ல.சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில்.
அண்மையில் 32 லட்சம் சூரிய மின் பலகைகளைக் கொண்டு,1.77 ஜிகா வாட்டுகள் மின்சாரம் தயாரிக்கும் நுார் அபுதாபி சூரிய மின் திட்டம்,மின்சாரத்தை வர்த்தக ரீதியில் உற்பத்தியை தொடங்கியது.

ஷாங்காயைச் சேர்ந்த ஜிங்கோ சோலார், ஜப்பானை சேர்ந்த மருபேனி கார்ப்பரேஷன் மற்றும் அமீரக நீர், மின் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு திட்டம் இது.

இந்தியாவில் தமிழ்நாட்டிலும்,சீனாவிலும் மிகப் பெரிய சூரிய மின் திட்டங்கள் உள்ளன. என்றாலும், உற்பத்தி அளவு,மின் பலகைகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் நுார் அபுதாபி முந்தியுள்ளது.

அபுதாபிக்கு அருகே உள்ள துபாயிலும் மிகப் பெரிய சூரிய மின் திட்டம் உள்ளது. அங்குள்ள முகமது பின் ரஷித் அல் மக்டூம் சூரிய மின் பூங்கா,2020 வாக்கில் ஆயிரம் மெகா வாட் சூரிய மின் உற்பத்தி அளவை எட்டும் என்கிறது,துபாய்.

சூழலை கெடுக்கும் கச்சா எண்ணெயைவிட,சூரிய மின் உற்பத்தியில் போட்டி போடுவது, அந்த நாடுகளுக்கு மட்டுமல்ல,உலகத்திற்கே நல்லது தான்.