ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தப்படுகிறதாம் 

செவ்வாய் ஏப்ரல் 07, 2020

அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரி, படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை மதித்து அனைத்து பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தளபதி கூறியுள்ளார். அற்ப விடயங்களுக்காக அநாவசியமாக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார நிலையுடனான போராட்டம் காரணமாக ஒவ்வொரு பிரஜைகளும் தங்களின் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொழில் நிமித்தம் வௌிமாவட்டங்களுக்கு சென்று சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தளபதி கூறியுள்ளார்.

எனினும், COVID-19 பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் ஒரு வழி முறையாகவே அவர்களை அனுப்பி வைக்காதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.