வேப்பஞ்சோலை!

சனி மே 18, 2019

நடுங்கும் இருட் கனவில்
எரியும் வலிச் சுடரோடு
நடக்கின்றன திசையறியாப் பாதங்கள்.

நந்திக்கடலெங்கும் படர்கிறது அகாலத்தீ.

வட்டுவாகல் பாலத்தடியில்
உடைந்து விழுகிறது நிலவு.

உயிருதிரும் நட்சத்திரங்களின்
இறுதி ஒளிக் குழம்பில்
மிதந்து கொண்டிருக்கும் செம்பூக்களின்
இறுதி இதழ்கள் அசைகின்றன.

வடலிகளிசைக்கும் முகாரிகளால்
வளர்ந்து நிறைகிறது கைவிடப்பட்ட வெளி.

சடசடக்கிற அதர்மத்தின் வாயிலிருந்து
பிசுபிசுத்து வழிகிறது உயிர்.

வானத்தைப் பார்த்தபடி விழுகின்றன
இயலாமையின் விழிகள்.

மனுநீதிச் சோழர்களற்ற உலகமெங்கும்
மக்கள் மணியெழுப்புகிறார்கள்.

கறுத்தப் பூனைகளின் காலடியில்
காத்திருக்கிறது வெள்ளை நீதி.

உருகியுருகி எரிகிறது ஊமைக் காயம்.

நினைவுழலும் ஒரு பாடலெழுதி 
நானெதைப் பிடுங்குவேன் இவ்வுலகில்?

ஆயிரமாயிரம் வேப்ப மரங்களால்
முளைத்தெழுகிறது
என் முள்ளிவாய்க்கால் மண்

வவேப்பம்பூப் பொறுக்கத் தொடங்கும்
நாளைய யுகச் சிறுமியிடம்
தம் வேரெங்கும் ஊறியிருக்கும்
மூதாதையர்களின் கதையை
சொல்லத் தொடங்குகிறது வேப்பஞ்சோலை

தீபிகா
17.05.2019
04.57 Pm.