வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும் என்று புகழேந்தி கூறினார்.

 அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்த புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளராக உள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க. அரசை சாடியும் பேட்டி அளித்து வந்த புகழேந்தி திடீரென தினகரனுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.ம.மு.க.வில் இருந்த செந்தில் பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ் செல்வன், கலைராஜன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் விலகி தி.மு.க.வில் சேர்ந்துள்ளனர்.

இவர்களில் செந்தில் பாலாஜி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகிவிட்டார். தங்க தமிழ் செல்வன், கலைராஜனுக்கு தி.மு.க.வில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் வழியில் புகழேந்தியும் தி.மு.க.வுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
 

வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும். தினகரன் என்னை போ என்றால் சசிகலா என்னை வா என்பார். சசிகலா வந்த பின்னர் நிலைமை மாறும். விடை கிடைக்கும்.


தினகரனின் நிர்வாகத்திலும், நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை. கட்சியில் இருக்கும் கொஞ்சம்பேரையும் இழந்துவிடக்கூடாது.

கோவையில் நான் பேசியது உண்மைதான். ஆனால் நான் பேசிய பேச்சு எடிட் செய்யப்பட்டு உள்ளது. கட்சியின் தகவல் தொழில்நுட்பு பிரிவு நிர்வாகிகள் தான் எனக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து அவர்கள் விரலைக்கொண்டு அவர்களது கண்ணை குத்தி உள்ளனர்.

என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு தான் பேரிழப்பு. இவ்வாறு அவர் கூறினார்.