விடுதலைப் புலிகள்-இந்திரா காந்தி - வி.பி.சிங் இரகசியம் உடைக்கும் வைகோ!

ஞாயிறு ஜூலை 28, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் ஆயுத உதவி செய்ய வேண்டும் என தாம் கேட்டதாக மதிமுக பொதுச்செயலரும் இந்திய ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

த இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் வைகோ இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது, நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பேசும் போது வாஜ்பாய் முன்பு ஆற்றிய ஒரு உரையை மேற்கோள்காட்டினேன். வங்கதேச தனிநாட்டை உருவாக்கியதற்காக இந்திரா காந்தியை துர்காதேவியாக பார்க்கிறேன் என வாஜ்பாய் பேசியிருந்தார்.

அதேபோல தனி தமிழ் ஈழத்தை உருவாக்கி கொடுத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு உங்களை அன்னை பராசக்தியாக தமிழர்கள் வணங்குவார்கள் என்றேன். அப்போது உணர்ச்சிவசப்பட்ட இந்திரா காந்தி அம்மையார், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகிற தமிழர்கள் அம்மண்ணின் பூர்வகுடிகள் என பிரகடனம் செய்தார்.

அந்த கூட்டம் முடிந்த பிறகு இந்திரா காந்தி அம்மையாரிடம் தமிழீழத்தை உருவாக்கி தாருங்கள் என கேட்டேன். அப்போது இராணுவ நடவடிக்கையை நாம் மேற்கொண்டால் மலையகத் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். நமக்கும் இலங்கைக்கும் இடையே அவர்கள் சிக்கிக் கொள்வார்கள் என்றார். அப்
படியானால் அனைத்து தமிழர்களையும் ஒரே பக்கம் கொண்டு வரும் வகையில் வியூகம் வகுக்கலாமே என்றேன்.

அதை ஆமோதித்தவாறு அரசுடன் இந்த விவகாரத்தில் ஒத்துழைக்குமாறு என்னை அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது அவரது அமைச்சரவை சகாக்கள் அங்கு வர அந்த பேச்சை அப்படியே நாங்கள் நிறுத்திவிட்டோம். அதன் பின்னர் இந்து அலுவலகத்துக்கு சென்றேன். விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித்ததுவந்த ஜி.கே.ரெட்டியை அங்கு சந்தித்தேன். அவரிடம், இந்திரா காந்தி தமிழீழத்துக்காக ஏதோ ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.

போய் சந்தியுங்கள் என்றேன்.அப்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்துவிட்டது. அதற்கு அடுத்து இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டுவிட்டார். தனி தமிழீழத்தை உருவாக்கும் திட்டத்தை இந்திரா காந்தி வைத்திருந்தார்.பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு என்ன என்ன ஆயுதங்கள் தேவை என ஒரு பட்டியலோடு சந்தித்தேன்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மூலமாக பிரபாகரன் எனக்கு கொடுத்தனுப்பினார். அந்த பட்டியல் இன்னமும் என்னிடம் இருக்கிறது.

111

காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் என் மீது பாசம் வைத்திருந்தவர் வி.பி.சிங். அப்போது கூட்டணி ஆட்சி என்பதால் தம்மால் உதவ முடியாது என கூறினார்.

அதே நேரத்தில் மருந்துகளை அனுப்ப உதவுவதாகவும் கூறியதுடன் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஐ.கே.குஜ்ராலை சந்திக்கவும் சொன்னார்.

இதையடுத்து றோ மூத்த அதிகாரி ஒருவர் என்னை சந்தித்து தேவையான மருந்துகளின் பட்டியலைப் பெற்றுக் கொண்டார். மொத்தம் 47 இலட்சம் ரூபா மதிப்பிலான மருந்துகளுக்கான பட்டியலைக் கொடுத்தேன். ஆனால் சில காரணங்களுக்காக அது அனுப்பி வைக்கப்படவில்லை. அந்தக் காரணத்தை இப்போது நான் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

என்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் அதை பற்றி எழுதுவேன் என்று அதில் வைகோ கூறியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, தேசத்துரோக வழக்கில், வைகோவுக்கு தமிழகச் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 2009ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்ட பின்னர், அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், தீர்ப்பை எதிர்த்து, வைகோ மேல்முறையீடு செய்திருந்ததையடுத்து, குறித்த மனு, கடந்த 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே,வைகோவுக்கு, சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டது. வைகோ தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நன்றி: ஈழமுரசு