விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களும் இரத்துச் செய்யப்படுமாம்!

வியாழன் அக்டோபர் 10, 2019

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவதாகவும், அதேபோல் விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வதாகவும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

´சிறந்த தொலை நோக்கு பார்வை, வேலை செய்யும் நாடு´ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (09) அநுராதபுரத்தில் இடம்பெற்றது.

இதில் பொதுஜன முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமளவான ஆதரவாளர்களும் பங்கேறறனர்.

இதன் போது சல்காது மைதானத்திற்கு வருகை தந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, மற்றும் வீரகுமார திசாநாயக்க ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ ஆமி காரர், மில்டரி காரர் மற்றும் நெவி காரர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட முப்படையினரை கடந்த 2015 ஆம் ஆண்டு இராணுவத்தினர் என்ற கௌரவ நாமத்தில் அழைப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

அவ்வாறு அபிமானமிக்க இராணுவ வீரர்களை தற்போதைய அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தாகவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பின்னர் விவசாயிகளுக்கு அதிகூடிய பெறுமதி மற்றும் வருமானத்தை பெற வழி ஏற்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷவின் யுகம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.