வறட்சியினால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மழை நீர் சேகரிப்பு செயற்றிட்டம்!

புதன் ஜூலை 24, 2019

அந்த வகையில் கிளிநொச்சி,பதுளை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த செயற்றிட்டத்தை இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையம் முன்னெடுத்துள்ளது.

பாம் நிறுவனத்துடனான (PALM Foundation) பங்குடமையின் கீழ், இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தினால் 2016இல் இருந்து முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்திற்கு யூ.எஸ்.எய்ட் (US AID) இனால் நிதியளிக்கப்படுகிறது.

கிளிநொச்சி,பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 391 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 17,900 பேர் இச்செயற்திட்டத்தின் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தால் பயன்பெற்றுள்ளனர்.

மேலும்,48 பாடசாலைகள் மற்றும் 10 மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் என்பவற்றிலும் குறித்த மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள் நிறுவப்பட்டுள்ளன.

களஞ்சியப்படுத்துதல் மற்றும் கொள்திறன் என்பவற்றின் அடிப்படையில், 8,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட களஞ்சியப்படுத்தும் தாங்கிகள் வீட்டுப் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ள அதேவேளை,  10,000 இலிருந்து 16,000 லீற்றர்கள் வரையான கொள்ளளவுத் தாங்கிகள் வைத்தியசாலைகளுக்கும் 30,000 லீற்றர் கொள்ளளவுத் தாங்கிகள் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

900 மி.மீ இற்கும் குறைவான வருடாந்த மழை வீழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளும் உலர் வலயத்திலுள்ள ஒரு வீட்டுப் பாவனைக்கான மழைநீர் சேகரிப்புத் தாங்கி, 50 சதுர மீற்றர் பரப்புக் கொண்ட ஒரு சிறிய வீட்டுக் கூரை நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து,வறட்சிக் காலங்களின் போது வீட்டுக்கு நாளாந்தம் அவசியமான சமையல் மற்றும் குடிநீருக்கான 60-70 லீற்றர்கள் தண்ணீர்த் தேவையைத் திருப்திப்படுத்துவதற்கு உதவுகின்றது.

இதனிடையே, மட்டக்களப்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மூலமான நீரிணைப்பு வசதியில்லாதவர்கள் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களாக உள்ளனர்.