யாழ். குடாநாட்டு வான்பரப்பில் சிறிலங்காவின் யுத்த விமானங்கள் திடீரென பறந்தன!

சனி மே 23, 2020

யாழ்.குடாநாட்டு வான்பரப்பினுள் நுழைந்த சிங்கள விமானப்படையின் மிக் போர் விமானங்கள் மக்களை அச்சமூட்டும் வகையில் பறப்பினை மேற்கொண்டுள்ளன. 

இன்று சனிக்கிழமை  (23) நண்பகல் 1.50 மணியளவில் திடீரென வான்பரப்பில் நுழைந்த விமானங்கள் மீயொலியுடன் பறந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். 

கொரோனா காரணமாக வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண வான்பரப்பில் சில மாதங்களாக விமானப் பறப்புக்கள் இடம்பெறவில்லை. 

ஆனால், இன்று மதியம் திடீரென போர் விமானங்கள் நுழைந்தன. அவற்றின் பேரிரைச்சல் மக்களுக்கு யுத்த காலத்தை நினைவுபடுத்தியது. 

யாழ். குடாநாட்டின் பல இடங்களிலும் சந்திகள் மற்றும் வீதிகளில் படையினர் நிறுத்தப்பட்டு பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில், போர் விமானங்களின் பறப்பு இடம்பெற்றுள்ளது. 

யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட அந்த நாளை சிங்கள பேரினவாத அரசு யுத்த வெற்றி நாளாக இந்த வருடமும் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. 

அது மட்டுமன்றி, கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற யுத்த வெற்றி விழாவில் உரையாற்றிய சிங்கள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். 

சிறிலங்காவினுள் வெளிநாடுகளின் தலையீடுகளை முற்றாக புறக்கணித்திருந்தார். படையினரை புனிதர்களாக்கிய கோத்தபாய, அவர்களுக்கு எதிராக யாரும் குற்றம் சாட்ட முடியாது எனவும் கர்ஜித்துள்ளார். 

இந்த நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினரும் விமானப் படையினரும் மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மக்களை மீண்டும் அச்சமூட்டி, அவர்களை அடக்கி ஆளும் செயற்பாட்டை சிங்கள தேசம் ஆரம்பித்திருக்கின்றது.