யாழ்ப்பாணம், மானிப்பாயில் வாள்வெட்டு குழு 9 பேர் கைது

ஞாயிறு மே 26, 2019

யாழ்ப்பாணம், மானிப்பாயில் இடம்பெற்ற ரகசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், தனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வைத்து குறித்த 9 பேரும் (சனிக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனு ரொக்கின் என்பவரின் பிறந்தநாள் என்ற தகவலறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினர் மானிப்பாய் பகுதியில் சிவில் உடையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, மானிப்பாயில் தனு ரொக்கின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு பின்பக்கமாக உள்ள குளக்கட்டுப் பகுதியில் பிறந்தநாள் கொண்டாடிய ஐந்து பேரும், அதனையடுத்து நவாலி வயல் வெளிப்பகுதியில் வைத்து பிறந்த நாள் கொண்டாடிய தனு ரொக் உட்பட்ட நான்கு பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன் அவர்கள் தேடப்பட்டும் வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்கள்.

இதேவேளை, ஆவா குழுவின் உறுப்பினர் மனோஜ் என்பவருடைய பிறந்த தினத்தை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள விடுதி ஒன்றில் கொண்டாடிய போது, பொலிஸார் சுற்றிவளைத்தனர். அதன்போது பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் தப்பியோடிய நிலையில் ஐவர் மட்டும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.